கல்யாணம் என்பது..
திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது'
(Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு.
ஆம்... பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் - பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!
அப்படி நீங்களும் ஒரு ஆத்மார்த்த இணையாக, துணையாக இருக்க... தம்பதிகளுக்கும், தம்பதி ஆகப் போகிறவர்களுக்கும் இல்லற மந்திரம் போதிக்கிறது இந்தக் கட்டுரை.
மந்திரங்கள் உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பட்டும்!
இப்போதெல்லாம் நிச்சயத்தின்போதே சபையில் வைத்து பெண்ணுக்கு மொபைல் போனை பரிசாக வழங்குகிறார் மாப்பிள்ளை... முகூர்த்த நாள்வரை இருவரும் பரஸ்பரம் பேசி, பகிர்ந்து கொள்வதற்கு! பெரும்பாலான பெற்றோர்களும்கூட, தம் பிள்ளைகளின் இதுபோன்ற திருமணத்துக்கு முந்தைய பழக்கங்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் பச்சைக்கொடி காட்டிவிடுகின்றனர். எனவே, நிச்சயம் முடிந்த நாளிலிருந்து திருமண நாள் வரையிலான இந்தக் காலத்தை, 'மண இணைவு'க்கு தங்களை மன ரீதியாக தயார்படுத்திக் கொள்ள மாப்பிள்ளை - பெண் இருவருமே பயன்படுத்திக்கொள்வது குட்!
1. கற்பனையில் அவுஸ்திரேலியாவுக்குப் போய் தாராளமாக டூயட் பாடுங்கள். அதேசமயம், துணையின் வீட்டு உறவுகளோடு சந்தோஷமாக இருக்கும் பாச சீன்களையும் மனதில் ஓடவிடுங்கள். இது புதிய உறவுகளுடன் சுமுகமாவதற்கான மனப் பயிற்சியாக அமையும்.
2. வருங்கால துணையோடு பீச், கோயிலுக்குப் போவதில் தவறில்லை. அதேபோல அவர்கள் வீட்டுக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். கூச்சமாக இருக்கிறதா..? சரி, போனிலாவது மாமனார், மாமியார், நாத்தனார் என மற்ற உறவுகளோடு பேசிப் பழகுங்கள். அது திருமணம் முடிந்து நீங்கள் அந்த வீட்டில் கால் எடுத்து வைக்கும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான அந்நியத்தைக் குறைத்திருக்கும்.
3. ஒருவேளை நீங்கள் அவர்களின் வீட்டுக்கு வருவது, பேசுவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் சொன்னாலோ, செய்கையால் உணர்த்தினாலோ 'டல்' ஆகாதீர்கள், அவர்களை 'பழைய பஞ்சாங்கம்' என நினைக்காதீர்கள். புன்னகையோடு ஏற்று சந்திப்பைத் தவிருங்கள்.
4. தயக்கத்தின் காரணமாகக்கூட துணையின் உறவுகள் ஆரம்பத்தில் உங்களுடன் ஒட்டாமல் இருக்கலாம். உடனே அவசரப்பட்டு அவர்களைப் பற்றி உங்களுக்குள் தீர்ப்பு எழுதி, அதே மன நிலையோடு அவர்களை அணுகாதீர்கள்.
5. நிச்சயதார்த்த பஜ்ஜி, சொஜ்ஜி ஆறும் முன்பே அறிவுரைகள் ஆரம்பித்துவிடும். எல்லாவற்றையும் கேட்டு திகிலாகாதீர்கள். எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை 'டிக்' அடியுங்கள்.
6. 'கைக்குள்ள போட்டுக்க... முறுக்கா இரு' போன்ற பிறந்த வீட்டு உபதேசங்களை செவிப்பறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த விதை, பின் பல பிரச்னைகளுக்கு வேராகிவிடும்.
7. துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியுங்கள். பிடிக்காததை பிறகு தவிர்த்துவிடலாம்.
8. இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யாணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திகளைக் கேட்கவோ, படிக்கவோ சந்தர்ப்பம் வருவதுபோல் தெரிந்தால், கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நல்லவை மட்டுமே மனதுக்குள் போகட்டும்.
மேரேஜ் கவுன்சிலிங் அவசியமாகும் சூழல் இது!
பெண்களுக்கு பதினாறிலும், ஆண்களுக்கு இருபதிலும் என நம் முந்தைய தலைமுறை திருமணங்கள் முடித்து வைக்கப்பட்டபோது, அந்த வயதில் இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்கவில்லை. எனவே, நாணலாக வளைந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொண்டார்கள். ஆனால், இன்றைய சமூக, பொருளாதர மாற்றங்களால் பெண்கள் 26 வயதுக்கு மேலும், ஆண்கள் 29-35 வயதிலும்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இருவருக்குமே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அவரவர்களுக்கென கேரக்டரை சமரசங்களின்றி அமைத்துக் கொள்கிறார்கள்.
அப்படி வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கையில் இணையும்போது முட்டி முளைக்கின்றன பிரச்னைகள். எனவே, மாலை சூடிக்கொள்ளும் முன்னர் அவர்களுக்கு திருமணம் பந்தம், வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசியமாகிறது. அவற்றுள் சில இங்கே...
9. சாதாரண வேலை என்று நாம் நினைக்கும் எந்த வேலையுமே... பயிற்சிக்குப்பின்தான் சுலபமாக கைகூடும். அப்படியிருக்கும்போது ஆயிரங்காலத்துப் பயிர் திருமண பந்தத்தில் இணைய பயிற்சி இல்லாமல் எப்படி? குறிப்பாக மனதளவிலான பயிற்சிகள் அவசியம். அது சுயபயிற்சியாகவும் இருக்கலாம்... அனுபவம் வாய்ந்த பெரியோரின் வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாம். அல்லது குடும்பநல ஆலோசகர்களின் அறிவுரைகளாகவும் இருக்கலாம்.
10. துணையின் 'ஆத்மார்த்த' உறவாகிவிட வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.
11. என்னதான் இருந்தாலும் உங்கள் பக்க உறவுகளோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன்யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோன்ற விஷயங்களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.
12. நீங்கள் நெடுங்காலமாக பின்பற்றும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படலாம். 'அதெல்லாம் முடியாது' என முரண்டு பிடிக்காமல், அட்லீஸ்ட் அதை தள்ளி வையுங்கள். தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம்.
13. குறிப்பாக, உங்களுக்குத்தான் உயிர் தோழி-தோழன். உங்கள் துணைக்கல்ல. எனவே, அவர்களுக்கு நேற்றுவரை தந்த அதே முக்கியத்துவத்தை, நேரத்தை தர இயலாது என்பது உணருங்கள். 'நான் கல்யாணமானாலும் மாறல' என முறுக்காதீர்கள்.
14. குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்... அன்பு, நம்பிக்கை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அதுவாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.
0 Response to " கல்யாணம் என்பது.."
Post a Comment