தலைக்கு அழகு முடி

தலை உடலின் தலையாய பாகம். தலைக்கு அழகு முடி. கூந்தலை அழகாக வைத்துக் கொள்வதுதான் உண்மையில் நம்மை அழகாக வைத்துக் கொள்வதற்குச் சமம். இக்காலத்தில் அருகருகே அழகு நிலையங்களைப் பார்க்கலாம். இயற்கையில் அழகானவர்கள் பெண்கள் என்றால் அவர்களிடம் மிகவும் அழகானது கூந்தல்தான். அதனால்தான் அவர்கள் கூந்தல் அலங்காரத்தில் நேரத்தை அதிகமாக செலவிடுகிறார்கள். ஆனால் அழகிற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திலும் கூந்தலுக்கு நிறையவே தொடர்பு உண்டு.
***
உண்மையில் தலைமுடி அழகிற்கான படைப்பு அல்ல. உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தி தலைக்கு பாதுகாப்பை அளிப்பதே கூந்தலின் பணி. எண்ணைப்பசை தலைமுடி, வறண்ட தலைமுடி, எண்ணைப் பிசுக்குடன் கூடிய வறண்ட தலைமுடி என முடியில் சில வகைகள் உள்ளன.
பளபளப்பாக காட்சி தருவது ஆரோக்கியமான கூந்தல். பளபளப்பை இழந்திருப்பது வறண்ட தலைமுடி. அதிக அளவு வைட்டமின் பி மற்றும் புரதச் சத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலைப் போலவே கூந்தலும் நலமாக இருக்கும்.
***
ஒரு மனிதனுக்கு தலையில் ஒரு லட்சம் முடிகள் வரை இருக்கும். தினமும் 80 முடிகள் வரை கொட்டும். குளித்துவிட்டு தலைதுவட்டும்போது கொத்துக் கொத்தாக முடி உதிர்ந்தால் உடனே கவனிக்க வேண்டும்.
வளரும் நிலையில் 80 முதல் 90 சதவீத முடிகள் இருக்கும். மற்றவை ஓய்வுநிலை, உதிரும் நிலையில் இருக்கும். தினமும் உதிரும் 80 முடிகள் தான் உதிரும் முடிகள் கணக்கில் சேரும். கெரட்டீன் என்ற புரதத்தால் ஆனது தலைமுடி. அதன் வளர்ச்சிக்கு புரதம், சுண்ணாம்பு, இரும்பு போன்ற தாதுக்கள் தேவை. இல்லாவிட்டால் முடி உதிரும்.
***
பச்சைக் காய்கறி மற்றும் ஆட்டு இறைச்சி போன்றவற்றில் இருக்கும் இரும்பு மற்றும் செம்பு போன்ற தாதுக்களும் கூந்தலுக்கு நல்லது. நம் தோலில் சீபம் என்ற எண்ணைப் பசை சுரக்கும். இதன் அளவு குறைந்தாலும் தலைமுடி வறண்டு போகும்.
எண்ணைப் பிசுக்கான கூந்தல் உள்ளவர்கள் கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள் மற்றும் சாலட் போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறண்ட கூந்தல் உள்ளவர்கள் உணவில் சற்றே அதிக அளவில் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம்.
***
கூந்தலைப் பராமரிக்க பொதுவான சில வழிகள் உண்டு. தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அந்த ஆவியில் கூந்தலைக் காட்டலாம். அல்லது கொதிக்கும் நீரில் துண்டை நனைத்துப் பிழிந்து தலையில் சுமார் 10 நிமிடம் வரை சுற்றிக்கொண்ட பின்பு தரமான ஷாம்பு அல்லது சீயக்காய் பொடியால் தலைமுடியை நன்றாக அலசிக் காயவிட்டால் தலைமுடி மென்மையாகும். எலுமிச்சம் பழச்சாறில் வினிகர் கலந்து தலைமுடியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துக் குளித்தால் முடி வறட்சி குறையும்.
***
அதிகம் முடி கொட்டுவதைத் தடுக்க ஹேர்பேக் செய்ய வேண்டும். இதற்கு நெல்லிக்காய், வெந்தயப்பொடி, கறிவேப்பிலைப்பொடி, செம்பருத்திப் பொடி, வல்லாரைப்பொடி, கரிசாலைப்பொடி ஆகியவற்றை தலா 10 கிராமும், வேப்பிலைப் பொடி 5 கிராமும் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கெட்டியான கரைசல் தயாரிக்க வேண்டும்.
தலையில் சிறிது எண்ணை தடவிக் கொண்ட பிறகு இந்தக் கலவையை முடியில் தேய்த்து `ஹேர்பேக்’ செய்ய வேண்டும். அரைமணி நேரம் கழித்து அரிசி வடித்த கஞ்சியில் சீயக்காய் பொடியை கலந்து தேய்த்துக் குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். கூந்தலுக்கு பளபளப்பும் கிடைக்கும்.

0 Response to "தலைக்கு அழகு முடி"

Post a Comment