உதடு மற்றும் வாய்
இந்த வாரம் உதடுகள், பற்களின் பராமரிப்பையும், சிறப்பாக அவற்றை அழகுப் படுத்திக் கொள்வதையும் பார்ப்போம். உதடுகளை இதழ்கள்னு பூவோட சம்பந்தப்படுத்தி சொல்லும்போதே அது எவ்வளவு மென்மையான பகுதின்னு நமக்கு தெரியும். நம்ம உடம்பில் வேர்க்காத பகுதி உதடுகள்தான். உதடுகளுக்கு என்ன பெரிய கவனிப்பு தேவை, சும்மா வெடிப்புக்கு வேசலின் தடவினா போதாதான்னு கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வனப்பும் ஒரு முக்கிய காரணம். தனித்தனியா முகத்தில் ஒவ்வொரு பார்ட்ஸையும் கவனிக்க நம்மால முடியுமான்னு தோணும். தனித்தனியா கவனிக்க தேவையே இல்லை. நம்ம தினசரி வேலைகளிலேயே உதடுகளை பராமரிச்சுக்கறதுக்கான வழிகளும் இருக்கு.
காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லேசாக உதடுகளை தடவி விட்டால் போதும். உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக்கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப்பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல்ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுகள் நிறம் எப்போதும் மாறாமல் இருக்கும். ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயின் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்கள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தடவினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சாறு அல்லது பன்னீரும் கூட நல்ல நிறம் கொடுக்கும். ஆனால் பிறவியிலேயே கருமை நிறத்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ்டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உபயோகம் கூட உதடுகளை கறுப்படைய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.
உதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசியம். தினமும் பல்துலக்குவதோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களின் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப்போதும் பல் துலக்கிய பிறகு பற்களை இரண்டு விரல்களால் கீழ்ப்புறமாக (விசில் அடிப்பது போல கைவிரல்களை வைத்துக் கொண்டு) ஈறுகளில் விரல் பட அழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற்படாமல் ஓரளவு பாதுகாக்கலாம். அதோடு கால்ஷிய சத்துக்களை தேவையான அளவு எடுத்துக் கொள்வதும் பற்களை இடைவெளியிலிருந்து காப்பாற்றும்.
இடைவெளி ஏற்பட்டதும், உடனே கால்சியம் மாத்திரகளை எடுத்துக் கொள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது. வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கினால் பல் பளிச்சென்று ஆகும். அடிக்கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய்து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தாலே பற்கள் கறை பிடிக்காமல் பளிச்சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண்டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உபயோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும். இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்கடி செய்வதால் பல் கூச்சம் ஏற்படும். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிரஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.
ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றிற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படும் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெண்ட் அல்லது புதிதாக பல் பொருத்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை(cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமாறு தேர்ந்தெடுத்து அதனையே பொறுத்த வேண்டுமென்று பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளலாம். சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்திக் கொள்வதைவிட மிகவும் முக்கியமான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத்தை தடுப்பது. ஏனெனில் பலருக்கு தனது வாய் துர்நாற்றமடிக்கிறதா இல்லையா என்றே தெரியாமல் இருக்கும். இவர்கள் தானாக செக் செய்து கொள்வதைக் காட்டிலும் ( தானாக கண்டுபிடிக்க தெரியாமல் இருப்பவர்கள்) குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கைத் துணை போன்றவர்களிடம் கேட்பது நல்லது. இதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தால் நமக்கு தெரியாமல் அடுத்தவர் நம்மைக் கிண்டல் செய்ய நாமே காரணமாகி விடுவோம்.
வெளியில் அழகு படுத்திக் கொள்வதைக் காட்டிலும், துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக இருப்பதே அவசியம். சாப்பிட்ட பிறகு கிராம்பு மெல்வது கூட நல்ல பலனைத் தரும். அதிக சூடான, குளிச்சியான பொருட்களை பல்லில் படாமல் சாப்பிடுவதும் நல்லது. எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், ஆபிள் சிடார் வினிகர் போன்றவற்றை கூட ஸ்ட்ரா கொண்டு பல்லில் படாமல் குடித்தால் பற்கள் பாதுகாக்கப்படும். இப்போது பிரஷ்ஷிலேயே டங்க் க்ளீனர் வைத்து வந்திருக்கிறது. அதனைக் கொண்டே ஈறுகளையும் மசாஜ் செய்து விட முடியும். இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும்போதே பழக்கிவிட வேண்டும். மவுத்வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது.
இப்போது அழகுப்படுத்திக் கொள்வது எப்படி என்று பார்ப்போம். உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக்கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்கப்பை போட்டு விடாதீர்கள். அது மேக்கப்பை கெடுத்துவிடும். உதடுகளுக்கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும். மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்றும் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப்பை மாற்றுகிறேனென்று, லிப் பென்சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்குமா என்று தெரிந்து கொள்ளுங்கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுகளின் உள்ளே அல்லது வெளியே உள்ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.
உதடுகள் பெரிதாக உள்ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும்போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மேல் பக்கம் வேர்வை அதிகம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண்டு ஷேப் வரைந்த பிறகு, லிப்ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையிலும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும் முன்பு உதடுகளுக்கு பவுடர் அடிக்க தேவையில்லை. லாங்க் ஸ்டே உபயோகிக்காதவர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப்ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.
லிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப்ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிடங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டால் நன்றாக ஸ்மூத்தாக இருக்கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உபயோகித்து ஷேப் மாறுவதைக் காட்டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ்டிக்குகள் உபயோகிக்கலாம். இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதாக்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதைவிட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகான லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம். Gloss வெரைட்டி சின்ன வயதுக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். லிப்ஸ்டிக் ஷேடு பற்றி அறிய ஏற்கனவே மன்றத்தில் இருக்கும் என்னுடைய" இந்திய முகங்களுக்கேற்ற மேக்கப் ப்ராடக்ட்ஸ் என்ற பதிவினை பாருங்கள். கொஞ்சம் மாடர்ன் மற்றும் பெப்பி லுக்கிற்கு லிப்ஸ்டிக், லிப் லைனர் இரண்டுமே ஒரே நிறத்தில் Matt finish ல் போட்டால் பார்க்க நேச்சுரலாக இருக்கும். சிம்ரன், கேத்தரீனா கைஃப் போன்றவர்கள் இந்த வகை டெக்னிக்கில் லிப்ஸ்டிக் அப்ளை செய்திருப்பார்கள். ஆனால் லிப் க்ளாஸ் போடாமல் இருந்தால்தான் இந்த லுக் வரும்.
0 Response to "உதடு மற்றும் வாய்"
Post a Comment