முடக்கிப் போடும் முதுகுவலி..!
தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாப் பகுதி தசைகளும் முதுகோடு இணைந்திருக்கின்றன. அரக்கப் பரக்க வேலை செய்யும்போது இந்த தசைகள் இறுகி விடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸ் ஆகும்போது இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கின்றன. இதன் விளைவே முதுகுவலி.
முதுகுவலி வந்துவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதன் தாக்கமும் பல விதத்தில் இருக்கும். ஆதலால் சரியான நிபுணர்களிடம் சென்று, சிகிச்சை பெறுவதே சிறந்த வழி. மேலும் வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது, கவுன்சிலிங் ஆகியவைதான் இந்த முதுகுவலிக்கான சிகிச்சை. அதேபோல் அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்து கொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும் முதுகுவலி வரும்.மல்லாந்து, கவிழ்ந்து படுக்காமல் ஒருபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. முழங்காலை வளைத்து முன்னே கொண்டு வரவும். சிலருக்கு குப்புறப்படுத்தால் தான் தூக்கம் வரும். அப்படி படுக்கும்போது தலையணையை தலைக்கு வைக்காமல், இடுப்புக்கு கீழே வைத்து படுப்பது சிறந்தது. அதிக கடினமாகவும், அதிக மென்மையாகவும் இல்லாத மெத்தையை பயன்படுத்துவது நல்லது.
முதுகுவலி ஏற்படாமல் இருக்க, உட்காருவது மிகவும் முக்கியம். நாற்காலியில் உட்காரும்போது முதுகு நன்றாக நாற்காலியோடு ஒட்டும்படி அமரவும். கீழே சின்னதாக ஒரு பலகை போட்டு அதன்மீது இரண்டு கால்களையும் வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் முழங்கால் மூட்டு இடுப்பை விட உயரமான நிலையில் இருக்கும். உட்காருவதில் இதுதான் சிறந்த முறை. தொடர்ந்து பல மணி நேரம் உட்காராமல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து சில நிமிடங்கள் நடப்பது நல்லது.
எல்லாப் பொருட்களையும் மேஜையில் எட்டக்கூடிய இடத்தில் வைக்கவும். இடுப்பை அடிக்கடி திருப்ப வேண்டாம். அப்படி ஒரு சூழல் அமைந்தால், உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களையும் அதாவது உடம்பு முழுவதையும் திருப்பவும். அதேபோல் கனமான பொருட்களை தூக்கும்போது இடுப்பை வளைக்காமல் தூக்கவும். எப்போதும் தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது கால் விரல்களும் நேராக இருக்க வேண்டும். மிருதுவான, மெல்லிய குஷன்களை கொண்ட காலணிகளை அணிவது நல்லது. மிகவும் உயரமான ஹீல்ஸ் முதுகுவலியை உண்டாக்கும்.
நீண்ட நேரம் நிற்பது கூடாது. அப்படியே நிற்க நேர்ந்தாலும், பாதங்களில் ஒன்று மற்றதை விட உயரமாக வைக்கவும். அடிக்கடி நிற்கும் நிலையை மாற்றவும். கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும்.
சாதாரண முதுகுவலிக்கு ஓய்வும், உடற்பயிற்சியும்தான் தீர்வு. பயணங்களை குறைக்க வேண்டும். முதுகு வலி உள்ளவர்கள் பேருந்தில் பின் இருக்கையில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். பஸ் குலுங்கும்போது தூக்கித் தூக்கிப் போடுவதால் முதுகுத் தண்டு மீது அழுத்தம் அதிகமாகி பாதிப்பு மோசமாகும். அடிக்கடி மோட்டார் சைக்கிளில் பயணிப்பதை தவிர்க்கவும்.
கடும் ஜுரம், கீழே விழுந்ததால் ஏற்படும் முதுகுவலி, முதுகு சிவந்து வீங்கியிருப்பது, இடுப்புக்கு கீழ்பகுதியில் மரத்துப் போனது போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் ரத்தம் வருவது, தூக்கத்தின் நடுவே திடீரென வலி காரணமாக விழிப்பது, திடீரென உடல் எடை குறைவது ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
0 Response to "முடக்கிப் போடும் முதுகுவலி..!"
Post a Comment