வெற்றியின் நோக்கம்

விளையாடும் விளையாட்டிலிருந்து செய்கின்ற வேலை வரையிலும் வெற்றியை விரும்பாதவர் எவருமில்லை, நான்கு கடைகளுக்கு நடுவில் ஒரு கடையை அமைத்து, மற்ற கடைகளை விடவும் வியாபாரம் அதிகமாக நடைபெற்றால், அதைவிட சந்தோசம் வேறு எதுவும் இருக்க முடியாது. நாற்பது மாணவர்கள் இருக்கும் வகுப்பில் ஒருவன் மட்டும் அதிக மதிப்பெண்கள் எடுத்து, வெற்றியடைந்தால் அவனுக்கு அதை விடவும் வேறு சந்தோசம் இருக்க முடியாது.

ஊர் பசங்க எல்லாம் கண் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் அதில் ஒருவனுக்கு மட்டும் பச்சைக்கொடி காட்டினால் அந்த வெற்றிக் களிப்பை விடவும் வேறு ஒரு மகிழ்ச்சி அவனுக்கு இருக்க முடியாது. இப்படி வெற்றி என்பது அனைவரும் விரும்பும் ஒரு பரவசப் பொருளாகும். நாம் அனைவரும் ஏதோ ஒரு வெற்றியை எதிர்பார்த்துதான் எதையாவது செய்து கொண்டிருக்கிறோம். அடுப்பில் தீ வைப்பவள் சோறு பொங்கும் போது வெற்றியை காண்கிறாள், ஆற்றில் மீன் பிடிப்பவன் மீன் சிக்கும்போது வெற்றியை காண்கிறான்.

இப்படி சின்ன விசயங்களிலும் வெற்றி வரும்போது தான் மகிழ்ச்சியும், சந்தோசமும் வருகிறது, சிலருக்கு வெற்றியை எதில் காண வேண்டும் என்றே தெரியாது, இரண்டு மனிதர்கள் வாய்ச்சண்டை போட்டுக் கொள்ளும் போது, யார் பேச்சை நிறுத்துகிறார்களோ அவர் தோற்று விட்டதாக நினைத்துக் கொள்வார்கள், அப்படியானால் வெற்றி பெறுவதற்கு தாறுமாறான வார்த்தைகளை பேசத்தெரிந்தாலே போதுமா! அப்படியானால் அவர்கள் நோக்கத்திற்கான கீழ்தரமான வெற்றியே கிடைக்கும்.

வெற்றியின் நோக்கம் உயர்வாக இருக்க வேண்டும், நாம் பிரமிப்படைவர்களாக மட்டுமல்ல, பிரமிப்படைய வைப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதற்காக ஆகாயத்தில் கோட்டை கட்ட கூடாது, அந்தரத்தில் தோட்டம் போடக்கூடாது, தண்ணீரிலே கோலம் போடக்கூடாது நடக்க வேண்டிய காரியங்களையே செய்ய வேண்டும். வானத்தை நோக்கி பறப்பதற்கு முன்னால் பூமியில்தான் பிறந்தோம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

வெற்றியின் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கு ஒரு வழி இருக்கிறது! ''நாம் கட்டி வைத்திருக்கும் கோட்டையை இடித்து விட்டு புதிய கோட்டையை கட்டுவதுதான் அந்த வழி'' ஒன்றை இடிக்காமல் அதே இடத்தில் இன்னொன்றை கட்ட முடியாது. பகலெல்லாம் டிவி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புதிய பழக்கத்திற்கு நம்மை தயாராக்கிக் கொள்ள முடியாது. விடிந்த பிறகும் தூங்க வேண்டும் என்ற எண்ணத்தை இடிக்காமல், காலைதோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க முடியாது.

தன்னை மாற்றங்களுக்கு பழக்கிக் கொள்பவனால்தான் எவ்வித வெற்றியையும் அடைய தயாராகிக்கொள்ள முடியும். நாம் தூங்கும் அதே இடத்தில்தான் தினமும் தூங்க வேண்டும் என்பதில்லை, ஒருநாள் படுக்கையறையில் தூங்கினால் இன்னொரு நாள், சமையலறையில் கூட தூங்கலாம். மாற்றங்களே மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மாற்றங்களே வெற்றியின் உணர்வுத் தூண்டுதல்களாக செயல்பட்டு விரையத் தூண்டிவிடும்.

நாமோ எதை கட்டி வைத்திருக்கிறோமோ அந்த வரைமுறையை இடிக்க சிறிதும் தயாராவதில்லை, மெத்தையில்தான் தூங்குவேன் என்றால் ஏன் இன்று தரையில் தூங்கிப் பார்க்கலாமே! அது புதிய மகிழ்ச்சியாக இருக்குமே! என்று எவரும் நினைப்பதில்லை, ஒருநாள் வீட்டில் குளித்தால், ஒருநாள் ஆற்றில் குளியுங்கள், ஒருநாள் குளத்தில் குளியுங்கள், எது நல்லது என்று ருசி பார்த்து அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் அதுவே நீங்கள் கட்டி வைத்த கோட்டையாகிவிடும். பின்னர் அதை இடிப்பது சிரமம்.

புடிச்சாலும் புளியங்கொம்பை தான் புடிப்பேன் என்று ஒன்றை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால், உங்கள் நோக்கமும் அதற்குள்ளேயே சுருண்டு கிடந்து வியாகுலப் பட்டுக் கொண்டிருக்கும். மாறிவரும் உலகில் மாற்றங்களுக்கும் தயாரானால் தான் புதிய வெற்றியின் புதிய பாதையை அமைத்துக்கொள்ள முடியும். நீங்கள் தொங்கிக் கொண்டிருப்பது நிஜமாகவே உயர்வானதுதான் என்றால் பரவாயில்லை, அதுவே பலமிழந்து கொண்டிருந்தால் விழுவதற்குள் கட்சி மாறிவிடுங்கள் நிச்சயம் ஒரு புதிய வெற்றிக்கொடியை நாட்டி வைக்க முடியும்.
 

0 Response to "வெற்றியின் நோக்கம்"

Post a Comment