அட்சய திருதியை

அட்சய திருதியை ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வரும். அன்று திருத்தலங்களுக்குச் சென்று இறையருள் பெறுவதால் வாழ்வு நலம் பெறும். அன்று, நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார் என்பர். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் - மே மாதம் அட்சய திருதியை தினம் கொண்டாடப்படுகிறது.

க்ஷயம் என்றால் தேய்தல், குறைந்து போதல், மறைதல் எனப் பல பொருள் உண்டு. அக்ஷயம் என்றால் வளர்தல், நிறைதல் என்று பொருள். திருதியை என்றால் மூன்றாவது நாள் என்பதாகும். திதி என்பது நாள். தினம் என்று பொருள். திதி (நாட்கள்)களில் சிறப்பு பெற்றது. அட்சய திருதியை என்று மகாகவி காளிதாசர் தாம் அருளிய உத்திர காலாமிருதம் என்ற நூலில் கூறியுள்ளார். அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம். அதுபோல் அட்சய திருதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள். அட்சய திருதியையன்று நாம் பூஜிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹா லக்ஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள். அட்சய திருதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

இனி இறைவர்களோடு அட்சய திருதியைக்குத் தொடர்புள்ள சில புராணச் செய்திகளைச் சுருக்கமாக நோக்குவோம். சிவமும், சக்தியும் இணைந்த சிவ சக்தியாக மக்கள் வழிபடுகிறார்கள். கிருஷ்ணபட்சத்தை அதாவது அமாவாசை யாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன், வளர்பிறையாக மாறக் காரணமான சிவன் ஆசியளித்தது தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இணைந்து அட்சய திருதியையாகச் சிறப்புற்றது. மஹாலக்ஷ்மி, மஹா விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் வளர்பிறை திருதியை தினத்தில் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. மேலும், குசேலர் சரித்திரத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பால்ய தோழர் குசேலர், கிருஷ்ருக்கு அவல் அளித்தார். அட்சயம் என்று சொல்லிவிட்டு அவலை கண்ணன் சாப்பிட்டார். இதன் காரணமாக அஷ்டலக்ஷ்மிகளும் குசேலர் வீட்டிற்கு வந்ததாகக் கதை. இந்தச் சம்பவம் நடந்தி தினம் அட்சய திருதியை தினத்தன்று தான் என்று கூறப் படுகிறது. ஆகவே அன்று குசேலர் சரித்திரத்தைப் படித்தால் குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஐதிகம்.

மஹாபாரதத்தில் துச்சாதனன் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவுடன், பாஞ்சாலி, தன் மானம் காக்கக் கதறி அழுதாள். அவளுடைய அபயக் குரல் கேட்ட கண்ணன், அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன் னான். திரௌபதியின் புடவை குறையில்லாமல் வளர்ந்தது. இந்தச் சம்பவம் நடந்ததும் திருதியை தினம்தான் என்று இதிகாசம் கூறுகிறது. எனவே அன்று புதிய ஆடை வாங்குவது சிறப்பாகக் கருதப்படுவதால் இன்றும் இப்பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. அகிலத்திற்கும் அன்னையாக விளங்கும் அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் ஒரு திருதியை தினம். எனவே அட்சய திருதியை தினத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவது ரொம்ப சிறந்ததாம். பாண்டவர்கள் காட்டில் இருந்த சமயம், அன்ன பஞ்சம் தீர்க்க, கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினமும் திருதியை தினம்தான். குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வரியத்தை அடைந்த தினமும் இதுதான். இதுபோன்று இன்னும் பற்பல நிகழ்ச்சிகள் நடந்த தினம் அட்சய திருதியை தினம்தான்.

இனி அட்சய திருதியை தினத்தில் செய்ய வேண்டிய பூசை முறைகளைச் சுருக்கமாக நோக்குவோம். அந்நாளில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பூசை அறையில் கோலம் போட வேண்டும். லக்ஷ்மிநாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் (அவரவர்கள் விருப்பப்படி) படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்றவேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாக்ஷி விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், வெள்ளி, சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும். அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும். இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.

இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பர். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும். அதாவது அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வது, கோடை காலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கிக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், சந்தான பாக்யம் நிகழும் என்பர்.

இத்தகைய சிறப்புமிக்க அட்சய திருதியையில் நாமும் பொன், பொருள், புத்தாடை வாங்கி மகிழ்ந்தது, இறைவனை வழிபடுவோம்.

0 Response to "அட்சய திருதியை"

Post a Comment