அர்த்தமுள்ள அட்சய திருதியை
சித்திரை மாதம் அமாவாசைக்குப்பின் வரும் திருதியைத் திதி, “அட்சய திருதியை’ என்று போற்றப்படுகிறது. (இவ்வருடம் 16.5.2010 அன்று அட்சய திருதியை ஆகும்.) இந்நாளில் மேற்கொள்ளப்படும் சுப காரியங்கள் அனைத்தும் மேன்மேலும் வளரும் என்று சொல்லப்படுவதால் இந்நாளில் தான தர்மங்கள் செய்வதும், ஏழை எளியவர்களுக்கு புது ஆடைகள் வழங்குவதும் நலம் தரும் என்பர். வசதி இல்லாதவர்கள் அன்று பசுமாட்டிற்கு ஒரு வாழைப்பழமோ, அல்லது ஒரு கைப்பிடி புல்லையோ ஆகாரமாகக் கொடுத்தாலும் மஹாலட்சுமி மகிழ்வாள். அதனால், செல்வச்செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

கடந்த பத்து வருடங்களாக, “அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்கினால் மேன்மேலும் தங்கம் வாங்க வாய்ப்பு கிட்டும்; இல்லத்திற்கு வேண்டிய விலை உயர்ந்த பொருள்களை வாங்கும் சக்தி ஏற்படும்’ என்ற நம்பிக்கையில் அந்த நாளில் தங்க நகைகள் விற்கும் கடைகள் நோக்கி ஒரு சிலர் கிளம்பிவிடுகிறார்கள். ஆனால், எந்த சாஸ்திரத்திலோ, ஞான நூல்களிலோ அன்று தங்கம் வாங்கச் சொல்லி வற்புறுத்தவில்லை என்று சாஸ்திரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் புராணக் கூற்றின் படி, இந்நாளில்தான் பிரம்ம தேவன் இந்தப் பூவுலகத்தைப் படைத்தார் என்றும், திரேதாயுகம் தோன்றியதாகவும், பரசுராமர் அவதரித்ததாகவும், பலராமர் அவதரித்தார் என்றும் அறியலாம்.

பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டபோது சூரியபகவான் அவர்களுக்கு ஓர் அட்சயப் பாத்திரத்தை வழங்கியதாகவும், அதில் தேவையான உணவு ஒரு தடவை மட்டும் வரவழைக்க முடியும் என்றும், “அந்த அட்சயப் பாத்திரத்தை சூரியன் வழங்கிய நாள் அட்சய திருதியை’ என்று மகா பாரதத்தில் ஒரு குறிப்பு உள்ளது. ஏழையான குசேலர் தன் நண்பனான பகவான் கிருஷ்ணனை இந்நாளில் ஆவலுடன் சென்று சந்தித்து செல்வ வளம் பெற்றதாகவும் புராணம் கூறுகிறது. துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்றதால், பாஞ்சாலி, துரியோதனனின் சபையில் துயில் உரியப்படும் நிலைக்கு ஆளானாள். அப்போது பாஞ்சாலி, கண்ணனை வேண்டிட, அவர் “அட்சயம்’ என்று சொல்ல, அவளது ஆடை வளர்ந்து கொண்டே வந்ததாம். அந்நாளும் இந்நாள்தான் என்று புராணம் கூறும். பொதுவாக, இந்நாளில், பகவான் கண்ணனுக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் எண்ணியது கைகூடும். அன்று அஷ்டலட்சுமி பூஜையை இல்லத்தில் மேற்கொண்டு, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் இனிப்பான செய்திகள் வருவதுடன் அஷ்டலட்சுமிகளின் அருளும் கிட்டும் என்பர்.

பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றினை பரமன் கொய்திட, அது அவரின் கையில் ஒட்டிக் கொண்டது. அந்தக் கபாலத்துடன் ஈஸ்வரன், பிட்சாடனராக அலைந்து திரிந்து, இறுதியில் ஸ்ரீ அன்னபூரணியிடம் காசியில் பிட்சை பெற்று நிவாரணம் பெற்றது இந்நாளில்தான். பராசக்தியின் அம்சமான சாகம்பரி தேவி, பல அரிய மருத்துவ விருட்சங்களை உருவாக்கியதும், ஐஸ்வர்ய லட்சுமி, தானிய லட்சுமி போன்ற திருமகள் அவதாரங்களும் அட்சய திருதியை நாளில்தான் தோன்றின. இந்நாளில் வணிகர்கள் புதிய கணக்கு ஆரம்பிக்கலாம். வீடு கட்டத் திட்டமிடுபவர்கள், பூமிபூஜை போடலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். பெண் பார்க்கலாம். மாணவ-மாணவிகள் புதிய நவீனக் கல்வி கற்கச் சேரலாம். மறைந்த முன்னோர்களை நினைத்து வழிபாடுகள் செய்யலாம். மற்றும் பல நல்ல காரியங்கள் செய்தால் எல்லாம் நல்லதே நடைபெறும். “அட்சயம்’ என்ற சொல்லுக்கு “வளர்வது’ என்று பொருள் சொல்லப்படுவதால், “வளம் சேர்க்கும் இந்நாளில் பொருள் வாங்க வசதி இல்லையே?’ என்று கவலைப்படாமல் சிறிதளவு உப்பு வாங்கினாலும் வளமான வாழ்வு கிட்டும். உப்பு, கடலிலிருந்து தோன்றிய பொருள். மஹாலட்சுமியின் அம்சம். எனவே, இந்நாளில் லட்சுமி பூஜை சிறப்பிக்கப்படுகிறது. இந்நாளில் விரதம் மேற்கொண்டு, தானதர்மங்கள் செய்து இறைவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும்.
0 Response to "அர்த்தமுள்ள அட்சய திருதியை"
Post a Comment