அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்
இது உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம். இணையத்தில் உலவி இருப்பீர்கள். திடீரென்று உங்கள் கணினி abcd (விளங்காத பெயர் உள்ள) வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்தி தோன்றும். வைரசை நீக்க இலவச ஆண்டிவைரஸ் ஒன்றை தரவிறக்கவும் அறிவுரையுடன் லிங்கும் தரப்படும்.
அதனை தரவிறக்கி நிறுவி விட்டால் தொலைந்தீர்கள். அந்த மென்பொருள் உங்கள் கணினியில் அமர்ந்து கொள்ளும். ஸ்கேன் செய்வதற்கு மட்டும்தான் இலவசம். வைரசை நீக்குவதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று மிரட்ட ஆரம்பிக்கும். அடிக்கடி எச்சரிக்கை செய்தி தந்து உங்களை எரிச்சலூட்டும்.
இது போன்ற போலி அன்ரிவைரஸ் மென்பொருள்களின் எண்ணிக்கை அதிகம். அடிக்கடி இது போன்று போலி மென்பொருள்களை வெளியிட்டு காசு பார்த்து வருகிறார்கள்.
இதை போன்றதொரு இன்னொரு கூட்டம்தான், உங்கள் கணினியை வேகமாக்குகிறேன் என்று வரும் போலி மென்பொருள்கள். மாட்டுவண்டி போல் செயல்படும் உங்கள் கணினியை ரொக்கெட் போல மாற்றி காட்டுகிறேன் என்று சாத்தியமில்லாத சத்தியம் அளிப்பார்கள். இலவசம் என்பார்கள்.
தரவிறக்கி நிறுவி விட்டால் பழைய கதைதான். ஸ்கேன் பண்ண இலவசம் ரொக்கெட்வேகம் வேண்டும் என்றால் பத்து டொலர் காட்டுங்கள் என்று ஆசை காட்டுவார்கள். அந்த மென்பொருளை உங்கள் கணினியில் இருந்து நீக்குவதும் உங்களுக்கு தலைவலி ஆகி விடும்.
இது போன்று போலி மென்பொருள்கள் ஆயிரக்கணக்கில் உலவி வருகின்றன. அவர்களின் குறி அப்பாவிகளை ஆசை வார்த்தை காட்டி காசு பறிப்பது.
இது போன்ற போலிகளை அப்பாவிகளை தரவிறக்க வைத்து பரவ செய்வதற்காக ஈமெயில் மூலம், வலைப்பதிவுகள் மூலம் இந்த போலி மென்பொருள்களை பற்றி பெருமையாக எழுதுபவர்களுக்கு ஒரு தரவிறக்கத்திற்கு இவ்வளவு என்று கமிசன் கொடுத்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவிகளே.
இங்கு சொல்ல வரும் விடயம் என்னவெனில் இலவசம் என்று எதை கண்டாலும் உங்கள் கணினியில் நிறுவி தொல்லைக்கு உள்ளாகாதீர்கள். யார் எந்த மென்பொருளை பற்றி எழுதினாலும் கூகுளில் அதை பற்றி செய்தி உள்ளதா என்று தேடி பாருங்கள். நல்லவிதமாக எழுதி உள்ளார்களா என்று பார்க்கவும். நம்பிக்கை வந்தால் மட்டும் தரவிறக்கி பயன்படுத்தவும். இல்லையெனில் விலகி ஓடி விடுங்கள்.
0 Response to "அப்பாவிகளை குறிவைக்கும் போலி மென்பொருள்கள்"
Post a Comment