பவானி

20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ‘வைஜயந்தி ஐ.பி.எஸ்’ படத்தை சிறிய மாற்றங்களுடன் ரீமேக் செய்திருக்கிறார்கள். ஆக்ரோஷ விஜயசாந்திக்கு பதில் புன்னகை இளவரசி சினேகா. நேர்மையான போலீஸ் அதிகாரியான சினேகா, உள்ளூர் அரசியல் தாதா கோட்டா சீனிவாசராவுக்கு பணிந்து போக மறுக்கிறார். அமைச்சர் ஜி.ஆர், இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், வழக்கறிஞர் ராஜ்கபூர் சகிதம் அவர் அடிக்கும் கொட்டத்துக்கு அளவே இல்லை. மாணவர் போராட்டத்தின் போது சினேகாவை கோட்டாவின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகிறார். போலீஸ் வேலைக்கு அன்பிட் என்று டிபார்ட்மென்ட் கைவிடுகிறது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கோட்டாவை பழிவாங்க, அவர் இருக்கும் கட்சியில் சேர்ந்து அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். பிறகு எப்படி பழிவாங்குகிறார் என்பது கிளைமாக்ஸ்.

விஜயசாந்தி இடத்தை பிடிக்க சினேகா நிறைய போராடியிருக்கிறார். தன் டிரேட்மார்க் புன்னகையை மறைத்து உடம்பில் விறைப்பும், முகத்தில் முறைப்பும் காட்டி ஆச்சர்யப்படுத்துகிறார். சண்டை காட்சியிலும் பறந்து பறந்து அடிக்கிறார். ஆனாலும் அவரின் நளினமான உடலமைப்பும் குழந்தை முகமும், ஆக்ஷனுக்குள் அடங்க மறுக்கிறது. நடுரோட்டில் அடிவாங்கி சாயும் போது அனுதாபத்தையும், “டேய்...’’ என்று கத்திக் கொண்டு எதிரிகள் மீது பாயும்போது ஆக்ரோஷத்தையும் அள்ளுகிறார். சம்பத் நேர்மையான போராளியாக வருகிறார். அவரின் பிளாஷ்பேக்கும், போராட்டமும், முடிவும் அக்மார்க் டிராமா. கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல கத்தி கத்தியே காதை பஞ்சராக்குகிறார். 

ஏற்கெனவே பார்த்த கதை என்பதால் திருப்பங்களோ, முடிவோ பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ‘திருநெல்வேலி மாநகராட்சி வரவேற்கிறது’ என்ற போர்டை மட்டும் காட்டிவிட்டு படத்தை ஐதராபாத் பிலிம் சிட்டியில் எடுத்து பூ சுற்றுகிறார்கள். சாதாரண இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் உயர் அதிகாரியான பவானியிடம் நடந்து கொள்ளும் முறையும் அவரை எதிர்க்க முடியாமல் சினேகா தவிப்பதும் எரிச்சலை உண்டாக்குகிறது. நேர்மையான போலீஸ் ஏட்டாக வரும் விவேக் காமெடி கலகலப்பூட்டுகிறது. ரோட்டு கடை பஜ்ஜியை பிழிந்து ஆட்டோவுக்கு ஆயில் போடுவது, செல்போன் பேசியபடி வண்டி ஓட்டி விபத்துக்குள்ளாவது என்று அவரது அட்வைஸ் காமெடிகள் ரசிக்க வைக்கிறது. இசையும், ஒளிப்பதிவும், உள்ளேன் அய்யா சொல்கிறது.

0 Response to "பவானி"

Post a Comment