சிங்கம் புலி

அச்சில் வார்த்ததுபோல ஒன்றுபோல இருக்கும் இரட்டையர்கள். அவர்களில் ஒருவன் நல்லவன், மற்றவன் கெட்டவன். சாமர்த்தியமான இந்தக் கெட்டவனை நல்லவன் எப்படி வெற்றிகொள்கிறான் என்பதே கதை. 

சிவா தார்மீகச் சிங்கம். அஷோக்கோ பசுத்தோல் போர்த்திய புலி (இருவரும் ஜீவா). சிவாவுக்கு வீட்டில் கெட்ட பெயர். வேஷதாரி அஷோக் சொக்கத் தங்கம் என்று பெயர் எடுக்கிறான். சிவா மீன் வியாபாரி. அநியாயங்களைத் தட்டிக் கேட்பான். அஷோக்கின் தொழில் வக்கீல். பொழுதுபோக்கு பெண்களைக் கவர்ந்து அவர்களைத் தன் வலையில் வீழ்த்திப் பிறகு கைவிடுவது. ரவுடிகளின் சகவாசமும் உண்டு என்று இரண்டு கேரக்டர்களுக்கும் ஆறு வித்தியாசங்களைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

அஷோக்கின் மன்மத லீலைக்குப் பலர் இரையாகிறார்கள் என்றால் காயத்ரி (சௌந்தர்யா) பலியே ஆகிவிடுகிறாள். அவள் மரணத்துக்குத் தன் தம்பிதான் காரணம் என்பதை அறிந்த சிவா அவன் மீது புகார் கொடுத்துக் கூண்டில் ஏற்றுகிறான். அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பும் அஷோக், இப்படியே விட்டால் சிவா தன்னை உள்ளே தள்ளிவிடுவான் என்று நினைத்து அவனைப் போட்டுத்தள்ள ஏற்பாடு செய்கிறான். சிவா தப்பிக்கிறானா, அவன் குடும்பத்தார் அவனைப் புரிந்துகொள்கிறார்களா என்பதே மீதிக் கதை. தங்கையின் கல்யாணம், சிவாவின் காதலில் வரும் சிக்கல் என்ற கிளைக் கதைகளும் இதில் உண்டு. 

இரு துருவங்களாக இருக்கும் இட்டைப் பிறவிகளுக்குள் நடக்கும் மோதல் புது விஷயமல்ல. அந்த மோதலைச் சொல்லும் திரைக்கதையைப் புதிதாக அமைத்திருக்கலாம். அல்லது சில காட்சிகளையாவது புதிதாக அமைத்திருக்கலாம். இதெல்லாம் தேவையில்லை என்று புது இயக்குநர் சாய் ரமணி தீர்மானித்துவிட்டார். ஒரு இளைஞன் பெண்களை எளிதில் கவர்ந்துவிடுவான் என்றால் அதைக் காட்ட ஒரே ஒரு உருப்படியான காட்சியைக்கூட அவரால் உருவாக்க முடியவில்லை. முதலில் முறைக்கும் காயத்ரி பிறகு மசியும் விதம் படு அபத்தம். நல்ல வேளை ஸ்வேதா – சிவா காதல் உருவான கதையை விளக்காமல் அவர்களைக் காதலர்களாகவே அறிமுகப்படுத்திவிட்டார் இயக்குநர். 

அஷோக்கின் லீலைகளை ஏனோதானோவென்று சித்தரித்து போரடிக்கும் இயக்குநர் சிவாவின் சீற்றத்தைச் சிறுபிள்ளைத்தனமாகச் சித்தரித்து எரிச்சல்படுத்துகிறார். தேவையில்லாத பல காட்சிகளைத் திணித்துப் பொறுமையைச் சோதிக்கிறார். தம்பி ஏன் அப்படி உருவானான் என்பதைக் காட்டவில்லை. சிவாவைக் கொல்லத் துரத்தும் தாதாக்களின் முயற்சி படு காமெடி. குறிப்பாக அந்த தொப்பி ஐடியா செம மொக்கை. 

இயக்குநர் இரட்டை வேடங்களைவிட இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் நம்பியிருக்கிறார். சந்தானத்துக்குப் போட்டியாக ஜீவாவும் காம நெடி வசனங்களைப் பொழிகிறார்.

படத்தில் பாராட்டத்தக்க அம்சங்களும் இருக்கின்றன. இரட்டை வேடங்களைத் திரையில் கையாண்ட விதம் ஆச்சரியப்படுத்துகிறது. இருவரும் ஒரே ஃபிரேமில் வரும் காட்சிகள் மிக இயல்பாக உள்ளன. சண்டைக் காட்சிகள், குறிப்பாக ஒருவரை ஒருவர் துரத்தும் காட்சிகள் நன்கு படமாக்கப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடியே நகரும் படத்தில் ஹோட்டலில் ஜீவாவை திவ்யா தாக்கும் காட்சி மட்டும் சர்ப்ரைஸ்.

ஜீவா நடிப்பில் குறை வைக்கவில்லை. எப்போதும் ஒரே மாதிரி நடந்துகொள்ளும் சிவா, இரண்டு முகம் காட்டும் அஷோக் ஆகிய வேடங்களைத் திறமையாகக் கையாள்கிறார். சென்னைத் தமிழைக் கச்சிதமாகப் பேசுகிறார். ஆனால், இப்படி மாஸ் ஹீரோ இமேஜுக்காக டிராக் மாறுவது தேவையா என்பதை ஜீவா யோசிக்க வேண்டும். 

சிவாவின் காதலி ஸ்வேதாவாக வரும் திவ்யா ஸ்பந்தனாவின் முகப் பொலிவு மனதில் நிற்கிறது. ஆனால் ரொம்பவே குண்டாக இருக்கிறார். சில காட்சிகளே வரும் சௌந்தர்யா சிக்கென்று இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். பழைய ஸ்டைல் காஸ்டியூம் மேக்கப்பில் வரும் சந்தானத்தின் காமெடி படத்துக்கு நிச்சயம் பக்க பலம்.


மணி சர்மாவின் இசையில் ஓரிரு பாடல்கள், கேட்கும்போது பரவாயில்லை என்று சொல்ல வைக்கின்றன. ஆனால் எதுவும் மனதில் நிற்கவில்லை.
 

கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஓடும் படத்தில் விறுவிறுப்பும் இல்லை, புதுமையும் இல்லை. சீறாத சிங்கம், பாயாத புலி!

0 Response to "சிங்கம் புலி"

Post a Comment