தென்மேற்குப் பருவக் காற்று

பண்பாட்டுக் கூறுகளை அழுத்தமாகவும் கூடியவரையில் மிகை இல்லாமலும் சொல்லும் படங்கள் மிகவும் அரிதாகவே வருகின்றன. பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட படங்கள் கதையம்சத்திலோ அல்லது பாத்திரப் படைப்பிலோ சறுக்கிவிடுவதையும் பார்த்துவருகிறோம். இந்தப் பின்னணியில் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ முக்கியத்துவம் பெறுகிறது. தேனிக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களையும் அதில் உள்ள மனிதர்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள இந்தப் படம் பல அம்சங்களில் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

இரண்டு கிராமங்கள். ஒரு கிராமத்தில் ஓரளவு வசதி. இன்னொன்றில் அது இல்லை. இங்கே உழவு, கால்நடைகள் என்று வருமானத்துக்கு வாய்ப்பு அதிகம். அங்கே அது இல்லை. திருடுவதே அங்கு பலருக்குத் தொழில். இந்தக் கிராமத்தில் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பேச்சி என்ற பெண்ணுக்கும் (வசுந்தரா) அந்தக் கிராமத்தில் ஆடுகளைப் பறிகொடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முருகன் என்ற பையனுக்கும் (விஜய சேதுபதி) காதல்.

முருகனின் அம்மா வீராயியோ (சரண்யா) தன் அண்ணன் மகளை மருமகளாக்கிக்கொள்வதாக வாக்குக்கொடுத்துவிட்டார். கடும் உழைப்பும் துணிச்சலும் இயல்பாகிப்போன அம்மா, தகப்பன் இல்லாத பையனைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கட்டுப்பாட்டையும் திருட்டு, சண்டை ஆகிய தடைகளையும் தாண்டி அவன் அந்தப் பெண்ணைக் கைப்பிடிக்கிறானா இல்லையா என்பதே கதை.

படத்தின் முக்கியமான விஷயம் நடிகர்களும் காட்சிகளும் வசனங்களும் பெருமளவில் இயல்பாக இருப்பதுதான். கிராமத்துச் சண்டை, அதற்கு நடுவே காதல் என்றால் வீச்சரிவாளும் ரத்தச் சேறுமாகக் குலை நடுங்கவைக்கும். படங்களுக்கு நடுவே ஆறுதல் தருகிறது தென்மேற்குப் பருவக் காற்று. இயக்குநர் சீனு ராமசாமியும் வன்முறையைக் காட்டுகிறார். ஆனால் வன்முறையை வைத்தே கதையை நகர்த்தாமல் மனிதர்களின் பல்வேறு விதமான இயல்புகள், போக்குகள், ஆகியவற்றை அதிகம் நம்புகிறார். இரண்டு ஊர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம், ஆடு திருடும் படலம் காதலுக்கு வித்திடும் திருப்பம், பெண்னைத் தேடிப் போகும் படலம், போலீஸ் விசாரணை, நீதிமன்றம், தண்டனை, பழிவாங்குதல் ஆகியவற்றுக்கு மத்தியில் காதல் வளருவது, அம்மாவின் ஆக்ரோஷம், அவர் மாறும் விதம் என்று படத்தின் முக்கியமான அம்சங்களில் பலவும் இயல்பாகவே நிகழ்த்தப்படுகின்றன.

திருட்டையே தொழிலாகக் கொண்ட குடும்பத்தை சீனு ராமசாமி காட்சிப்படுத்தும் விதம் அபாரம். அவர்கள் ஹோட்டலில் கறி திருடுவது, ஆடு திருடுவது, போலீஸைச் சமாளிப்பது, ஜெயிலுக்குப் போகும் மகனை வீரத் திலகம் இட்டு அம்மா வழியனுப்புவது என்று காட்சிகளில் மண் வாசனையும் யதார்த்தமும் கோலோச்சுகின்றன. குறி சொல்பவராக வருபவரின் கேரக்டர் அட்டகாசம். திருடியவனை மறைத்துவைக்க மொத்தக் குடும்பமும் நாடகம் ஆடும்போது, தன் வீட்டுப் பெண் போலீஸில் மாட்டிக்கொள்ளக்கூடும் என்ற நிலை வந்ததும் திருடன் சட்டென்று வெளிப்பட்டு சரண்டர் ஆவது அழுத்தமான காட்சி. ஆடு திருட வந்த பெண்ணிடம் தன் மனதை இழந்து பேய் அடித்ததுபோல நடமாடும் கதாநாயகனின் உணர்ச்சிகளும் அவளைத் தேடிச் செல்லும் காட்சிகளும் இயல்பாக உள்ளன.

தன் கணவனைத் திருட்டுத் தொழிலால் பலிகொடுத்த அம்மா தன் மகனைத் திருடர் குடும்பத்தில் கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் காதலனைக் கைப்பிடிப்பதைவிட அவன் உயிரோடு இருப்பதுதான் எனக்கு முக்கியம் என்று காதலி சொல்வதைக் கேட்டு அம்மாவின் மனம் மாறும் இடம் நம்பகத்தன்மையுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ் திருப்பமும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. முறைப்பெண் கேரக்டர் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் விதம் மனதைத் தொடுகிறது.

உழைப்பும் உக்கிரமுமாக வாழும் அம்மாவாக நடித்திருக்கும் சரண்யாதான் படத்தின் முக்கியப் பாத்திரம். தன் பாத்திரத்தின் தன்மையை ஆழமாக உள்வாங்கி அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். இரத்ததான முகாம் நடக்கும் இடத்தில் சென்று சத்தம் போடுவதாகட்டும், தன் மகனையே ‘சங்கை அறுத்துடுவேன்’ என்று மிரட்டுவதாகட்டும், ‘இங்கதானடி வாழ வந்த... உள்ள போடி’ என்று தன் கெத்து குறையாமல் மருமகளை ஏற்றுக்கொள்வதாகட்டும், சரண்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

நகரத்துப் பெண்ணாக கிளாமர் காட்டிவந்த வசுந்தரா, அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். படிய வாரிய தலை, பாவாடை தாவணி, மருண்ட விழிகள், வெட்கத்துடன் வெளிப்படும் வசீகரப் புன்னகை, காதலையும் பயத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தும் முகபாவங்கள் என்று பட்டையைக் கிளப்புகிறார்.

கதாநாயகன் விஜயசேதுபதிக்கு வலுவான வேடம் இல்லை. தன்னைக் கேட்காமலேயே அம்மா கல்யாண விஷயத்தில் வாக்குக் கொடுக்கும்போதும் தன் காதலுக்கு அம்மா குறுக்க வரும்போதும் வாயைப் பொத்திக்கொண்டிருப்பது பொருத்தமாக இல்லை. பல காட்சிகளில் சோக நிழல் படிய வளைய வரும் வேடத்தில் திறமையை வெளிக்காட்ட அதிக வாய்ப்பில்லை என்றாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்.

தீப்பெட்டி கணேசனின் கதையோடு இணைந்த காமெடி ரசிக்கவைக்கிறது. வசுந்தராவின் அண்ணனாக வரும் அருள்தாஸ் கவனிக்க வைக்கிறார். முறைப்பெண்ணாக வருபவரின் பளிச்சிடும் புன்னகையும் அகன்ற விழிகளும் மறக்க முடியாதவை. சூப்பர் சுப்பராயனின் சண்டை இயக்கமும் படத்தின் யதார்தத்துக்குப் பக்கபலமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள் சினிமாத்தனமாக இல்லாமல் கச்சாவாக இருப்பது பொருத்தமாக உள்ளது. என்.ஆர். ரஹ்நந்தன் இசையில் பாடல்கள் கதையின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. கள்ளிக்காட்டில், ஏடி கள்ளச்சி ஆகிய பாடல்கள் மனதில் தங்குகின்றன. செழியனின் ஒளிப்பதிவு கிராமத்துப் புழுதியையும் நிலக்காட்சிகளையும் அற்புதமாகப் படம்பிடித்திருக்கிறது.

பல விஷயங்களையும் கவனமாகச் செய்திருக்கும் சீனு ராமசாமி காதல் உருவாகும் காட்சிகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அதுபோலவே நாயகனின் கேரக்டரை நன்றாகச் செதுக்கியிருக்கலாம். முதல் பாதியில் படம் கொஞ்சம் வேகமாக நகர்ந்திருக்கலாம். இப்படிச் சில குறைகள் இருந்தாலும் பண்பாட்டுக் கூறுகளை இயல்பாகத் தன்னுள் கொண்டுள்ள கதையை அலுப்பூட்டாமல் சொன்ன சீனு ராமசாமி பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

0 Response to "தென்மேற்குப் பருவக் காற்று"

Post a Comment