வீட்டுத்தோட்டம்

வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு எஞ்சும் நேரத்தை பயனுள்ளதாகக் கழிக்கலாம். வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள்:

தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம்.லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் டப்புகளில் எல்லாம் மருதாணி, வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.சிறிய தொட்டிகளில் புதினா செடி, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் வைத்துக் கூட வளர்க்கலாம்.

அதிகம் சிரமம் இல்லாமல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள். தினமும் அது ஒவ்வொரு இலை விடும்போதும் உங்கள் மனம் ஆனந்தத்தில் கூத்தாடும். அந்த பூச்செடியில் ஒரு பூ பூத்துவிட்டால் கேட்கவா வேண்டும். நித்தியமல்லி, மல்லிச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் வீட்டில் ஒரு செடியாவது வளர்ப்போம் என்பது நமது கொள்கையாக இருக்கட்டுமே.




0 Response to "வீட்டுத்தோட்டம்"

Post a Comment