நடுநிசி நாய்கள்

கௌதம் வாசுதேவ் மேனன். இந்த மூன்று வார்த்தை மந்திரம் ரசிகர்களைக் கணிசமாகவே ஈர்த்திருக்கிறது. பெரிய ஸ்டார்கள் இல்லை. இசை இல்லை (சவுன்ட் எஃபெக்ட்ஸ் மட்டும்தான்). பாட்டு இல்லை. வெளிநாட்டு லொக்கேஷன்கள் இல்லை. ஆனாலும் நடுநிசி நாய்களுக்கு நல்ல ஓப்பனிங் இருந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இயக்குநர் மட்டுமே! டைட்டில் கார்டு போடும்போது எழுத்து இயக்கம் என்ற பெயருக்கு கிடைக்கும் கைதட்டல் மாஸ் ஹீரோவுக்குக் கிடைப்பதை விட அதிகமாக இருக்கிறது. கௌதம் மேனன் நன்றாகத்தான் படமெடுப்பார் என்ற நம்பிக்கையில் மக்களைத் தியேட்டருக்கு வரவழைத்த இந்த மந்திரம் அவர்களை திருப்தியோடு திருப்பி அனுப்புகிறதா என்பதே கேள்வி.

இது ஒரு சைக்கோ பற்றிய கதை. சிறு வயதில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் ஒருவன் நிகழ்த்தும் குற்றங்களும் அவன் சிக்கிக் கொள்ளும் விதமும்தான் கதை. ஆனால், கொஞ்சம் குழப்பமான காட்சியமைப்புகளும் அந்த இளைஞன் மீது நமக்கு பரிதாபம் ஏற்படுத்தத் தவறும் கதையோட்டமும் நெகட்டிவாகப் போய் முடிந்துவிடுகிறது.

கதையின் மையப் பாத்திரமான சமர் என்கிற வீரா (வீரா) சைக்கோ கொலைகாரனாக மாறுவதற்குக் காரணம் சிறு வயதில் அவன் அப்பாவிடம் அவன் பெற்ற கசப்பான அனுபவம் என்பதுதான் இயக்குனர் சொல்ல வரும் விஷயம். தன் மகனிடமே தவறாக நடந்துகொள்லும் வக்கிரம் ஒரு தந்தைக்கு இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் படத்தில் அந்தத் தந்தை நடந்துகொள்ளும் விதம் யதார்த்தமாக இல்லை. ஏதோ ஃபேஷன் ஷோவில் கலந்துகொள்வதுபோல முகமூடி போட்டுக்கொண்டு அவர் பெண்களுடன் சல்லாபம் செய்வதும் படு சாதாரணமாகத் தன் மகனைப் பாலியல் தொழிலாளிபோல நடத்தும் விதமுமாக நம்பகத்தன்மை அற்ற காட்சிகளால் கதையின் பிரதானமான பகுதி பலவீனமாக நிற்கிறது. கதையின் அடிப்படைக் காரணமே ஆட்டங்கண்டு விடுவதால் அதன் பிறகு கவுதம் தன் கேமிரா கோணங்களாலும் காட்சிகளாலும் புதுப் புது உத்திகளாலும் கதையைச் சொல்லும்போது அது வழுக்குத் தரையில் ஆடும் நடனம்போலத் தள்ளாடுகிறது.

சிறுவன் சமருக்கு உதவி செய்யும் பக்கத்து வீட்டுப் பெண் மீனாட்சியின் கதியைப் பதைபதைக்கும் விதத்தில் காட்சிப்படுத்துகிறார். கவுதம். தன்னைக் காப்பாற்றிய பெண்ணிடம் அந்தப் பையன் அத்து மீறும் தருணமும் அவள் எதிர்வினை ஆற்றும் விதமும் ஓரளவு சரியாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அவள் திருமணத்துக்குப் பிறகு நடக்கும் கொலை சமருடைய மனநிலையின் வெளிப்பாடு என்பதைச் சரியாகச் சொல்லவில்லை. அதேபோல, தனக்கு இவ்வளவு பெரிய தீங்கு இழைத்த அந்தப் பையனுக்கு அந்தப் பெண் தரும் சலுகைகளும் வாரி வழங்கும் உதவிகளும் நம்பும்படி இல்லை.

சென்னைக்கு வந்த பிறகு அந்தப் பெண்ணை வைத்து கவுதம் உருவாக்கும் திருப்பம் எதிர்பாராததாக உள்ளது. ஆனால் அடுத்தடுத்துப் பாலியல் குற்றங்களைச் செய்துகொண்டே போகும் வீராவின் செயல்களில் சாகசம் அதிகமாக இருப்பதால் யதார்த்தம் தொலைந்துவிடுகிறது. வழக்கமான தமிழ் சினிமாக் கதாநாயகன் போல டொப் டொப்பென்று சுடும் துப்பாக்கி முதல் கொன்றவர்களைப் போட்டு வைக்கும் மரணக் கிணறுவரை எல்லா விஷயங்களையும் ஒற்றை ஆளாகவே செய்துமுடிக்கிறான்.

நிழலான காரியங்கள் நடப்பதாகச் சந்தேகப்படக்கூடிய வீடுகளில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் சாதாரண மனிதர்கள் எகிறிக் குதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் நகர்ப்புறங்களில் இப்படி நடக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்கூட உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடுதான் களம் இறங்குவார்கள்.

சமர், வீரா என்று இரு வித குணாம்சங்களைக் கொண்ட பாத்திரத்தில் நடித்திருக்கும் கவுதமின் அஸிஸ்டென்ட் வீரா அபாரமாகச் செய்திருக்கிறார். மனப் பிறழ்வையும், பெண்கள் மீதான கவர்ச்சிக்கும் அவர்கள் மீதான வன்மத்துக்கும் நடுவில் அலைக்கழிக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார். இதையெல்லாம் தாண்டி அன்புக்கான ஏக்கத்தையும் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். சமீரா ரெட்டியைக் கடத்துவதும் அதை ஒட்டிய பரபரப்பான நிகழ்வுகளும் புலனாய்வின் போக்கும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளில் வீராவின் அபாரமான நிதானம் பெரும் பலமாக இருக்கிறது.

வன்முறைக்கு ஆளாகும் பெண்ணின் போராட்டத்தையும் வலியையும் சமீரா ரெட்டி கச்சிதமாகச் சித்தரிக்கிறார். காதலனுடன் தொலைபேசியில் பேசும்போது காதலில் உருகும் சமீரா, வீராவுடன் காருக்குள் சண்டை போடும்போது ஆவேசமாகச் சீறுகிறார்.

இன்ஸ்பெக்டராக வருபவர் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டு ஆன்ரியாக நடித்திருக்கும் மீனாட்சி அசத்தியிருக்கிறார். குறிப்பாக விபத்துக்குப் பிந்தைய காட்சிகளில்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த மனோ‌ஜ் பரமஹம்சாதான் இதற்கும் ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்கின்றன. மனோஜின் கேமரா இரவுக் காட்சிகளை யதார்த்தமாகப் படம்பிடித்துத் தருகிறது. பயமுறுத்த வேண்டிய இடங்களில் பயன்படுத்தப்படும் டாப் ஆங்கிள் ஷாட்கள் எரிச்சலூட்டும் க்ளீஷேக்களாக உள்ளன. கவுதம் மேனனின் மேக்கிங் வழக்கம்போலவே நேர்த்தியாகவும் வலுவான விஷுவல் சென்ஸ் கொண்டதாகவும் உள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலவீனமாக இருப்பது பெரும்பாலான பாத்திரங்களின் பின்னணி என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் போவதுதான்! சமீர் கதாபாத்திரத்துக்குக் கிடைக்க வேண்டிய பரிதாபம் கிடைக்காமல் போக அதுவே காரணம். அதேபோல அவனுக்கு உதவும் அந்தப் பெண் யார் என்பதைச் சொல்ல இயக்குநர் மெனக்கெடவில்லை. மும்பையில் அவ்வளவு வசதியுடன் வாழும் அவளது பின்னணி என்ன? அவள் வீட்டில் வேறு யாரையுமே ஏன் காணவில்லை? அவளுக்குச் சென்னையில் பெரிய பண்ணை வீடு எப்படி வந்தது? - எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை என்பது மட்டுமல்ல. இப்படிப்பட்ட கேள்விகளை கவுதம் கணக்கில் எடுத்துக்கொண்டதாகவே தெரியவில்லை.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய கவுதமின் கவலை படம் முடியும் சமயத்தில் பேசும் சைக்யாட்ரிஸ்டின் குரலில் எதிரொலிக்கிறது. முடிந்த பிறகு திரையில் போடப்படும் டைட்டில்களில் பிரதிபலிக்கிறது. ஆனால் படத்தில் அந்த அக்கறை மிகவும் பலவீனமாகவே வெளிப்படுகிறது.

காட்சிகளின் வலிமை, ஒளிப்பதிவு, வலுவான நடிப்பு, பாடல்களோ பின்னணி இசையோ தேவையில்லை என்ற துணிச்சல் ஆகியவற்றுக்காக நடுநிசி நாய்களைப் பாராட்டலாம். ஆனால் உளவியல் சார்ந்த க்ரைம் படங்களில் ஏன், எப்படி என்பது மிகவும் முக்கியம். இந்த இரண்டு அம்சங்களிலும் படம் பலவீனமாகவே இருக்கிறது. சிகப்பு ரோஜாக்கள், மூடுபனி, நூறாவது நாள் போன்ற படங்களில் இந்த அம்சங்கள் வலுவாக அமைந்திருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

நடுநிசி நாய்கள் - பாய்ச்சலில் வேகம் குறைவு.

0 Response to "நடுநிசி நாய்கள்"

Post a Comment