தூங்கா நகரம்

மதுரை என்றாலே கத்தி ரத்தம் என்ற முத்திரையை இன்னொருமுறை அழுத்தமாக பதிக்கப் பார்த்திருக்கும் படம் தூங்காநகரம். நாலுநாள் தாடியோடு சுற்றும் நான்கு இளைஞர்கள்... அவர்களுக்கு நடுவிலான உறவு, நேசம், நெருக்கம், துரோகம் எல்லாமும்தான் கதை. ஆனால், இந்தக் கதைக்குள் வருவதற்குள் இயக்குனர் எங்கெங்கோ சுற்றுகிறார்.

மதுரைக்குப் பக்கத்து ஊர்களிலிருந்து பிழைப்பதற்காக மதுரைக்கு வரும் நான்கு இளைஞர்கள் தற்செயலாகச் சந்தித்து, நெருங்கிய நண்பர்களாகிறார்கள். பகலில் ஆளுக்கொரு ஜோலி, இரவில் பாரில் ஜாலி என்று கழிகிறது இவர்கள் வாழ்க்கை. நடுவே, அப்பாவிப் பெண்ணுக்கு லோக்கல் பிரமுகரின் மகனால் நடக்கவிருக்கும் அநீதியைத் தட்டிக் கேட்கப் போக, நால்வருக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

அந்த லோக்கல் பிரமுகரின் கையில் நண்பர்களில் ஒருவர் சிக்க, அவர் மூலமாகவே பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார் லோக்கல் பிரமுகர். அடுத்து நடந்தது என்ன என்பதை இடைவேளைக்குப் பிறகு வரும் படம் சொல்கிறது.

மழை கொட்டும் இரவொன்றில் ஒரு மூட்டையில் வைத்து ஒரு பிணம் எரிக்கப்படுவதைக் காட்டியபடி தொடங்கும் படம் சட்டென்று ஃபிளாஷ்பேக்குள் நுழைந்துவிடுகிறது. நண்பர்கள் நால்வரின் அறிமுகத்தை அடுத்து அவர்கள் நண்பர்களான கதையைச் சொல்லி கலகலப்பாக ஆரம்பிக்கிறார் அறிமுக இயக்குனர் கௌரவ். அந்த சஸ்பென்ஸும் கலகலப்பும் படத்தை சுவாரஸ்யமாகத் தொடங்க முழுமையாகக் கைகொடுக்கிறது. ஆனால், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மதுரை புராணங்களைப் பாடுவதாகவே கதை தொடர்ந்து கொண்டிருப்பது கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. பல படங்களில் நாம் பார்த்துச் சலித்த திருவிழாக் காட்சிகள், பார் காட்சிகள் என்று சலிப்போடுதான் கதை நகர்கிறது. இத்தனைக்கும் நான்கு நண்பர்களின் வித்தியாசமான பின்புலம், அவர்களில் ஒருவனின் காதல் கதை என்று சுவாரஸ்யப்படுத்த எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் மிஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு உதவி செய்யச் செல்லும் காட்சியில் இருந்துதான் கதைக்குள் வேகம் கிடைக்கிறது. அதன் பிறகு இரண்டாவது பாதியில் கதையை முழுமையாக தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் இயக்குனர்.

நான்கு நண்பர்களில் நாயகன் அந்தஸ்து விமலுக்கு. ஆனால், வழக்கமான நான்கைந்து முகபாவனைகளை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார். வித்தியாசப்படுத்த அவருக்கும் தேவையிருக்கவில்லை. இயக்குனரும் ரொம்ப மெனக்கெடவில்லை.

விமல் என்றில்லை... படத்தில் வரும் எல்லோருமே தங்கள் முழுமையான திறமையை வெளிப்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. அந்த நான்கு நண்பர்களில் வாய்பேச முடியாதவராக வரும் நிஷாந்த் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்.

அஞ்சலி கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். முக்கியமான ரோல் இல்லை. அதே சமயம் டம்மி பீஸ் என்றும் சொல்ல முடியாது. கிடைத்த கேரக்டரில் நடிப்பில் குறைவைக்கவில்லை.

தத்தனேரி சுடுகாட்டில் பிணம் எரிப்பவன், லோக்கல் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று வெரைட்டியாக கேரக்டர்கள் பிடித்திருக்கும் இயக்குனர் அதில் உள்ள சுவாரஸ்யங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதையெல்லாம் செய்திருந்தாலே முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கதையின் திருப்பமாக வரும் நிகழ்ச்சி சமீபத்தில் செய்திகளில் அதிகமாக அடிபட்ட ஜவுளிக்கடைகளில் டிரையல் ரூமில் உடைமாற்றும் பெண்களைப் படம்பிடிக்கும் கும்பலைப் பற்றியது. ஆனால், அதை ஏதோ ஹாபி போலச் செய்வதாகக் காட்டி அதன் தீவிரத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது விஜய் உலகநாத் ஒளிப்பதிவு. மதுரை நகரின் கொண்டாட்டங்களையும் மதுரையின் இரவுகளையும் யதார்த்தமாக் கண் முன் நிறுத்துகிறார். அதேபோல விமல் அஞ்சலி டூயட் பாடல் காட்சியை கிரீட்டிங் கார்ட் போல அழகாகத் தருகிறார். மழைக் காட்சிகளில் அந்த மூடுக்குத் தகுந்தபடி இருக்கிறது ஒளிப்பதிவு.

சிரிக்க வைப்பதற்கு சிங்கம்புலி செய்யும் முயற்சிகளை விட அந்த இரண்டு பாட்டிகளும் செய்யும் அட்டகாசம் ரசிக்கவைக்கிறது. கமலா தியேட்டரின் முதலாளி வி.என். சிதம்பரம் வில்லன் வேடத்தில் ஆச்சரியப்படுத்துகிறார். அந்தக் கூர்மையான விழிகளும் வன்மத்தை வலுவாக வெளிப்படுத்தும் முகபாவங்களும் சபாஷ் போட வைக்கின்றன. வசன உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றாலும் அதை குறையாகத் தெரியாத வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

சுந்தர் சி. பாபுவின் இசையில் கூரான பார்வைகள், எட்டுக் கண்கள் ஆகிய இரு பாடல்களும் கேட்ட மாத்திரத்தில் கவர்கின்றன. பின்னணி இசை பல இடங்களில் காட்சியோடு இசைந்திருக்கிறது. திருப்பங்கள் வருவதற்குச் சற்று முன், கட்டியம் கூறுவதுபோல ஓசை எழுப்பி பயமுறுத்தியிருக்க வேண்டாம்.

படத்தில் ஊமை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. படத்தில் வரும் ஒரு பாத்திரம், பேசும் திறன் இழந்தவரை ஊமை என்று சொல்வதை ஆட்சேபிக்க முடியாது. ஏனெனில் அந்த்ச் சொல்லைப் பயன்படுத்துபவர்க்ள் சமூகத்தில் இருக்கிறார்கள் என்னும் யதார்த்தத்தை அது பிரதிபலிக்கிறது. ஆனால் இயக்குநரின் கூற்றாகப் பின்னணிக் குரலில் ஒலிக்கும் வசனங்களில் (குரல் உபயம்: வைகைப் புயல் வடிவேலு) அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருப்பதையும் வாய் பேச முடியாதோரைக் கொச்சைப்படுத்தும் பழமொழியைச் சொல்லியிருப்பதையும் இயக்குநர் கண்டிப்பாகத் தவிர்த்திருக்க வேண்டும்.

இரண்டாம் பாதியின் வேகம், தனிப்பட்ட சில காட்சிகளில் துல்லியம் ஆகியவற்றுக்குக்காக கௌரவைப் பாராட்டலாம். பழக்கப்பட்ட காட்சிகளைத் தவிர்த்து, மதுரைப் புராணத்தைத் தவிர்த்து, புதிதாகக் காட்சிகளை உருவாக்கி, கதைக்குச் சீக்கிரமே வந்து சேர்ந்திருந்தால் தூங்காநகரம் தூள் கிளப்பியிருக்கும்.
          

0 Response to "தூங்கா நகரம்"

Post a Comment