புத்தாண்டு கம்ப்யூட்டர் சபதங்கள்
புதிய ஆண்டு 2011 பிறந்து தவழத் தொடங்கிவிட்டது. தங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட், அல்லது இரண்டையும் பயன்படுத்துபவர்களுக்கு, சில புத்தாண்டு சபதங்களை எடுக்கச் சொல்வோமா! வழக்கமாக நாம் சில சபதங்களை எடுப்போம். இன்று முதல் உடற்பயிற்சி, புகைப்பதை நிறுத்து, எடையை எப்படியாவது குறை, குறைவாகச் செலவழி, அதிகமாகச் சேமி என ஒவ்வொரு ஆண்டும் எதனையாவது உறுதியாகச் சொல்வோம். இந்த சபதங்களின் பின்னணியில் இருப்பது தனி மனித ஒழுக்கம் பேணுவதே.
இங்கு நாம் மற்றவர்களுக்கு இன்னல் இன்றி, அனைவரும் சந்தோஷமாக இருக்க, கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
கீழ்க்கண்ட சபதங்களை எடுத்துச் செயல்படுத்து வதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்து வதிலும் இன்டர்நெட்டை அணுகிப் பயன்படுத்து வதிலும் சிக்கல்கள் குறையலாம்; குறைவான தவறுகளை செய்யலாம்; மால்வேர் தாக்குதல் களிலிருந்து தப்பிக்கலாம். இவற்றைப் பார்ப்போமா!
1.அனைத்து டயலாக் மற்றும் எச்சரிக்கை செய்திகளையும் படிப்பேன். எடுத்துக் காட்டாக, இப்படிச் செய்தால், இந்த பைல் ஒரேயடியாக நீக்கப்பட்டுவிடும் என்று ஓர் எச்சரிக்கை செய்தி வருகையில், இந்த கட்டம் என்ன சொல்லப்போகிறது என்று உதாசீனப்படுத்தினால், பைல் அவ்வளவுதான்.
2. நான் என்னுடைய பைல்களை அடிக்கடி சேவ் செய்வேன். பல புரோகிராம்களில் தானாக சேவ் செய்திடும் வசதி இருந்தாலும், அவை குறிப்பிட்ட காலக் கெடுவில் தான் அந்த வசதியை இயக்கும். எனவே அடிக்கடி சேவ் செய்வது, உங்கள் உழைப்பைக் காப்பாற்றும். அதே போல பைலை எடிட் செய்கையில், தனித்தனியே சேவ் செய்திடுவேன். ஏனென்றால், அப்போதுதான் எடிட் செய்த மாற்றங்கள் இல்லாத பழைய நிலையில் உள்ள பைல் வேண்டும் எனில், அந்த பைல் நமக்குக் கிடைக்கும்.
3. என்னுடைய பைல்களின் பேக் அப் காப்பியை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் எடுக்காமல் அடிக்கடி எடுப்பேன். ஏனென்றால் நாம் பதிவு செய்திடும் சிடிக்கள் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. ஹார்ட் ட்ரைவ்/பிளாஷ் ட்ரைவ் படிக்க இயலா நிலைக்குத் தள்ளப்படலாம்.
4. மற்றவரிடம், கம்ப்யூட்டர் பிரச்னைக்கு உதவி கேட்கையில், என்னுடைய பிரச்னையைத் தெளிவாகக் கூறுவேன். இது மிக முக்கியம். எந்த ஒரு சிறிய பிரச்னையாக இருந்தாலும், இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு எண், பிரவுசர் மற்றும் என்ன செய்திடுகையில் கம்ப்யூட்டர் முடங்கிப் போனது, புதிதாக இன்ஸ்டால் செய்த சாப்ட்வேர் ஆகிய தகவல்களைக் கூறிப் பின்னர் பிரச்னையைக் கூற வேண்டும்.
5. பேஸ்புக் அல்லது பிற சமுதாயத் தளங்களில் போட்டோக்களை போஸ்ட் செய்கையில் பல முறை யோசிப்பேன். அப்படியே போட்டோக்களை தளங்களுக்கு அனுப்பி என் பக்கத்தில் அமைத்தாலும், அவற்றை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை வரையறை செய்திடுவேன். இதனை எல்லாரும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், 20 வயதில் ஒருவர் தன் போட்டோவினை ஒரு சமுதாய தளத்தில் பேஸ்ட் செய்தார். ஆனால் அதனால், அவரின் 32 ஆவது வயதில் பெரிய பிரச்னை ஏற்பட்டது.
6. என்னுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்றைய நாள் வரை மேம்படுத்தி வைத்துப் பயன்படுத்துவேன். அப்போதுதான், அண்மைக் காலத்திய வைரஸ்கள் மற்றும் மால்வேர்களை அணுக விடாமல் கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களைக் காத்திட முடியும்.
7. இணையத்தில் பார்ப்பதை எல்லாம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டு, பின்னர் கம்ப்யூட்டர் வேகமாக வேலை செய்யவில்லையே என்று குற்றம் சொல்ல மாட்டேன். தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வது, கம்ப்யூட்டர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்களின் செயல்பாட்டு வேகத்தை மட்டுப்படுத்தும்.
8. இமெயில் கடிதங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் நம்ப மாட்டேன். பல லட்சம் டாலர் உள்ளது. உங்கள் வங்கி கணக்குக் கொடுத்தால், 10% உங்களுக்கு. உங்களுக்கு இமெயில் லாட்டரி கிடைத்துள்ளது. வங்கி தன் அக்கவுண்ட்கள் அனைத்தையும் மீண்டும் சரி செய்து அமைக்கிறது. உங்கள் கணக்கு விபரத்தைக் கொடுத்து சரி செய்து கொள்ளுங்கள் --- என்பன போன்ற செய்திகளை முழுமையாகப் படிக்காமல், ட்ரேஷ் பெட்டியில் கூடத் தங்கவிடாமல் அழிப்பேன்.
9.செக்யூரிட்டி கேள்விகளை அலட்சியப்படுத்தாமல், பாஸ்வேர்ட்களைப் போல அவற்றைப் பாதுகாப்பேன். ஏனென்றால், அவையும் மிக முக்கியமானவையே. ஹேக்கர்கள் இது போன்ற தகவல்களை வைத்து,உங்கள் தகவல்களைத் திருட முடியும்.
10. மற்ற இன்டர்நெட் பிரவுசர்களையும் பயன்படுத்துவேன். ஒரு பிரவுசரை மட்டுமே பயன்படுத்த மாட்டேன். அப்போதுதான், ஒரு பிரவுசர் பழுதானாலும், அடுத்த பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வர முடியும்.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன புத்தாண்டு சபதங்களுடன் ஒப்பிடுகையில், நம் கம்ப்யூட்டருக்கான சபதங்கள், பின்பற்ற மிகவும் எளிமையானவையே. பின்பற்றக் கூடியவையே. எனவே நம் கம்ப்யூட்டர் பணியில் தொய்வும், முறிவும் ஏற்படாமல் இருக்க இந்த சபதங்களை எடுத்துக் கொள்ளுமாறு தரப்பட்டுள்ளது.
0 Response to "புத்தாண்டு கம்ப்யூட்டர் சபதங்கள்"
Post a Comment