ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்

அழகுபடுத்திக் கொள்வதும், அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று எண்ணுவதும் ஆண், பெண் இருபாலருக்கும் உரியவை. ஆயினும், நம் நாட்டைப் பொறுத்தவரை, அழகுபடுத்திக்கொள்வது என்பது பொதுவாக பெண்கள் சமாசாரமாக உள்ளது. 'இல்லை எங்களுக்கும் தேவை' என்று கேட்கிற ஆணா நீங்கள்..? மேலும் படியுங்கள்!

சிகை அழகு

கருமையான தலைமுடியே முக அழகிற்குக் காரணமாகும். முடிந்தவரை நரை அதிகமாகும் முன்னரே கடைக்குச் சென்று ஆண்களுக்குரிய 'டை' வாங்கி நரையை மறைத்துக் கொள்ளுங்கள்!

உச்சந்தலையில் முடி குறைய ஆரம்பித்தால், நீங்கள் கூடிய விரைவில் வழுக்கையாவது உறுதி! மனம் தளராதீர்கள். இதோ சில குறிப்புகள்!

உங்கள் தலைமுடியைக் குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள். சீப்பினைப் பயன்படுத்தித் தலையைப் படிய வாரிக்கொள்ளுதலைத் தவிர்த்து, உங்கள் வயதான தோற்றத்தைத் தள்ளிப் போடுங்கள். மேலும், வழுக்கை ஏற்படும் போது மூக்கு, காது மற்றும் தலையின் பின்புறம் உள்ள முடிகளை சீராக வெட்டி அல்லது நீக்கி உங்கள் தோற்றத்தைச் 'சிக்'கென்று வைத்துக் கொள்ளுங்கள்.

சரும பளபளப்பு

ஆண்கள் தங்களுடைய சருமத்தைப் பாதுகாப்பது மிக அவசியமாகும். அதுவும் தினந்தோறும் முறையாக செய்ய வேண்டும்.

முதலில் சருமத்தைக் குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கடைகளில் கிடைக்கும் சரும வறட்சியைக் குறைக்கும் க்ரீம்களையும், சூரிய வெப்ப தாக்குதலில் இருந்து காக்கும் க்ரீம்களையும் தடவிக் கொள்ளுங்கள். சில நாட்களிலேயே உங்கள் சருமம் வழவழப்பாகவும் பளபளப்பாகவும் ஆவதை உணர்வீர்கள்.

சருமம் மென்மையாவதால் முகச்சவரம் செய்து கொள்வது எளிமையாகி விடும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்த பளபளப்பு, வழவழப்பு என்பதெல்லாம் முகத்தோடு நின்று விடக்கூடாது. கைகள் கால்கள் என்று உடல் முழுவதுமான பராமரிப்பாக இருக்க வேண்டும்.

மேலும் பெண்கள் செய்வது போல வாரத்திற்கு ஒரு முறை, கடைகளில் கிடைக்கும் ப்யூமைஸ் (pumice stone) கல்லினைப் பயன்படுத்தி உடலின் சொரசொரப்பான பகுதிகளை வழவழப்பாக்கிக் கொள்ளலாம்.

ஆள் பாதி.. ஆடை பாதி

நீங்கள் உங்கள் உடைகளை அயர்ன் செய்ய சோம்பல் படுபவரா? கவலை வேண்டாம். எளிய வழி! துணிகளைத் துவைத்தவுடனேயே தாமதிக்காமல் அவற்றை நன்றாக உதறிக் காய வைத்தால் சுருக்கம் ஏற்படாது. அயர்னும் தேவையில்லை.

தட்பவெப்ப நிலைக்கேற்ப ஆடைகளைத் தேர்ந்தெடுங்கள். வெயில் காலங்களில் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியுங்கள். இவ்வகை ஆடைகள் குறைவான வெப்பத்தையே உள்வாங்கும். எனவே வியர்வையினால் ஏற்படும் கறைகள் குறைந்து விடும். மேலும் முழுமையாக வியர்வைக் கறைகள் தொலைய, அக்குளில் இருக்கும் முடிகளை நீக்கி விடுங்கள். இதன் மூலம் துர்நாற்றம் குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள்.

முகச்சவரத்திற்கு..

முகச்சவரம் செய்யும் உங்கள் ரேசர் நீண்ட நாட்கள் செயல்பட இதோ ஒரு எளிய வழி.

கடைகளில் கிடைக்கும் மினரல் ஆயிலையும், ரப்பிங் ஆல்கஹாலையும் (Rubbing alcohol) வாங்கிக் கொள்ளுங்கள். முகச்சவரம் முடித்த பின் ரேசரைக் காய வையுங்கள். பின் அதை மினரல் ஆயிலில் மூழ்க விடுங்கள். சிறிது நேரம் கழித்து ரேசரை வெளியே எடுத்து, ரப்பிங் ஆல்கஹாலால் எண்ணெயைத் துடைத்து எடுங்கள். மின்னும் உங்கள் ரேசர் நீண்டகாலம் உழைக்கும்!

0 Response to "ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்"

Post a Comment