மருந்து, மாத்திரை சாப்பிடும் போது…

இன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மினி மருந்தகமே உள்ளது. ஆனால் மருந்து, மாத்திரையை எப்படி முறையாகச் சாப்பிடுவது எப்படி என்று படித்தவர்கள் கூட அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
மருந்து, மாத்திரை சாப்பிடும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்…
1. நீங்கள் மருந்து, மாத்திரை வாங்கும்போது அதன் `காலாவதி தேதி’யைப் பார்த்து வாங்குங்கள். காலாவதி நாள் எட்டப்பட்டிருந்தாலோ, தாண்டியிருந்தாலே திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அதேபோல நீங்கள் ஏற்கனவே வாங்கியிருக்கும் மருந்து, மாத்திரை காலாவதி தேதியைக் கடந்துவிட்டால் அதைப் பயன்படுத்தாதீர்கள்- அது எவ்வளவு விலை உயர்ந்ததாய் இருந்தாலும்!
2. ஒரு நாளைக்கு மருந்தை எத்தனை முறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவரிடம் தெளிவாய் கேட்டு அறிந்து அதன்படி சாப்பிடுங்கள். நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை என்றால் ஒருநாளைக்கு ஆறு முறை சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நோய் குறையவில்லை என்பதற்காக ஒரே நாளில் அதிக முறை மருந்து சாப்பிடுவது தவறு.
3. எவ்வளவு மருந்து சாப்பிட வேண்டுமோ, அந்த அளவு மட்டும் சாப்பிடுங்கள். அதிக அளவில் மருந்து சாப்பிடுவது நோயை எந்தவிதத்திலும் விரைவில் குணப்படுத்தாது. மாறாக, கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடும்.
4. சில மருந்து, மாத்திரைகளில் 50 எம்.ஜி., 100 எம்.ஜி., 200 எம்.ஜி., என்று இருக்கும். மாத்திரையின் பெயரோடு அதையும் சேர்த்து ஞாபகத்தில் வைத்து வாங்க வேண்டும்.
5. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மருத்துவர் காய்ச்சலுக்காக `ஆன்டிபயாட்டிக்’ கொடுத்தால், நோய் குறைந்துவிட்டது என்பதற்காக இரண்டொரு நாட்களிலேயே நிறுத்திவிடக் கூடாது. மீண்டும் அந்த நோய் பலம் பெற்றுவிடக் கூடும்.
6. பழைய மருந்து வீட்டில் இருந்தால், அது காலாவதி தேதியை எட்டியிருக்கவில்லை என்றாலும் பயன்படுத்தும் முன் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். சில மருந்துகள் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களிலேயே வீரியத்தை இழந்துவிடும். எனவே மருத்துவரிடம் அதுபற்றிக் கேட்டுக்கொள்வது அவசியம்.
7. மருந்து உட்கொண்டதும் உடல்நிலையில் ஏதோ கஷ்டம் இருப்பதைப் போல உணர்ந்தால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் விஷயத்தில் இது மிகவும் முக்கியம். உங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால் அதை மருத்துவரிடம் முன்பே தெரிவிக்க வேண்டும். பெரியவர்களுக்கு வாங்கிய மருந்தை, அதே போன்ற நோய் என்பதற்காக குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது.
8. மருத்துவரிடம் மருந்தின் பெயர், எத்தனை முறை வழங்க வேண்டும், எத்தனை நாள் கொடுக்க வேண்டும், உணவுக்கு முன் அல்லது பின் எப்போது கொடுக்க வேண்டும், ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா, ஒருமுறை மருந்து சாப்பிட்டு முடித்ததும் அதை நிறுத்திவிடலாமா இல்லை தொடர வேண்டுமா என்பதைப் போன்ற விவரங்களைத் தெளிவாகக் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

0 Response to "மருந்து, மாத்திரை சாப்பிடும் போது…"

Post a Comment