ஆடுகளம்

பொல்லாதவன் என்ற ‘டைரக்டர் மூவி’யைக் கொடுத்த வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியின் அடுத்த படைப்பு என்பதாலும் தனுஷின் சமீபத்திய படங்கள் சரியாகப் போகாததாலும், சன் பிக்சர்ஸ் படம் என்பதாலும் ஓரளவு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருந்த படம்.


தமிழ்சினிமாவுக்கு புதிய ‘ஆடுகளமான’ சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ள படம். பேட்டைக்காரன் (ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்?) என்ற பெரியவரின் குரூப்பிடம் தொடர்ந்து தோற்றுக்கொண்டு வருகிறது ரத்தினம் குரூப். ரத்தினத்தின் அப்பா சேவல் சண்டையில் பெரிய ஆளாய் இருந்தவர். மேலும் ரத்தினம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். தனுஷ் பேட்டைக்காரன் குரூப்பில் உள்ள விசுவாசமான சிஷ்யன். குரு பேட்டைக்காரனிடம் கற்றுக்கொண்டதை வைத்து,ஒரு சேவலைத் தனியாக வளர்த்து வருகிறார். ஆனாலும் பேட்டைக்காரன் அது பந்தயத்தில் ஜெயிக்காது என்று கணிக்கிறார். ரத்தினத்திற்கும் பேட்டைக்காரனுக்கும் நடக்கும் ஃபைனல் சேவல் சண்டையில் தனுஷ் குருவை மீறி தன் சேவலைக் களமிறக்கி ரத்தினத்தை தோற்கடிக்கிறார். அதனால் குரு அடையும் மனமாற்றமும், செய்யும் செயல்களும் தனுஷின் வாழ்வைப் புரட்டிப்போடுகின்றன. அதை அறியாமல் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் தனுசும், அவரது குருவும் என்ன ஆகிறார்கள் என்பதே படம். இதுவொரு உண்மைக்கதை என்பது கூடுதல் தகவல்.

பிட்ச்சை ரெடி பண்ணுவதிலேயே முதல் பாதி போய்விடுகிறது. ஆனாலும் இடைவேளைக்கு முந்திய அரைமணி நேரத்தில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு, இறுதி வரை தொடர்கிறது.

தனுஷ் மதுரைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். பொல்லாதவன் போலவே, பஞ்ச் டயலாக் பேசாமல் டைரக்டர் சொல்படி கேட்டு நடித்திருக்கிறார்.  நாயகி டாப்ஸி அழகான பொம்மை போல் இருக்கிறார். வருங்காலத்தில் நடிக்கலாம். ஆங்கிலோ-இந்தியப் பெண்ணாகப் பொருந்திப்போகிறார்.

பேட்டைக்காரனாக நடித்திருக்கும் ஜெயபாலனை படத்தின் தூண் எனலாம். அடர்ந்த தாடி மீசைக்குள்ளும் உணர்ச்சிகளை அனயாசமாகக் காட்டுகிறார். கிஷோர், தனுஷின் தாயாக வருபவர், நண்பர் என எல்லோரும் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். 

ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாத்தே’ பாடல் கலக்கல். தனுஷ் ஆடும் ஆட்டத்திற்கு தியேட்டரும் சேர்ந்து ஆடுகிறது. மற்ற பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கலாம். வேல் ராஜின் ஒளிப்பதிவு வித்தியாசமான ஏறக்குறைய பிளாக்&ஒயிட் டோனைப் பல காட்சிகளில் பயன்படுத்தி உள்ளார். நன்றாக உள்ளது. சேவல் சண்டைக் காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று கூறினாலும், பார்க்க அப்படித் தெரியவில்லை.

முதல் பாதியில் பேஸ்மெண்டைப் பலமாகப் போடுவதாக நினைத்து கொஞ்சம் இழுப்பது, புதுக்கோட்டையைப் போல் படத்தை ட்ரை ஆக்குகிறது. வித்தியாசமான கதைகளத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நல்ல கதையையும் கொடுத்த மொத்த டீமையும் பாராட்டலாம்.மற்றபடி, படம் கமர்சியலாக வெற்றியடைவது சன் டி.வி.யின் கையில் உள்ளது.

0 Response to "ஆடுகளம்"

Post a Comment