சிக்குபுக்கு

 


 
சிக்குபுக்கு - 'சிக்கு' என்பதற்கு காதலில் அகப்படு என்ற பொருள் கொண்டாலும் புக்கு என்பதற்கு தோதான பொருள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சிக்கு புக்கு என்ற பதம் பெரும்பாலும் குழந்தைகளால் இரயில் வண்டியையே குறிப்பிடப்படும். நாயகன், நாயகி முதன் முதலில் இரயில் வண்டியில் சந்தித்துக் கொள்கின்றனர் என்பதன் குறியீடாக தலைப்பு இருக்கலாம் என்று வேண்டுமானால் யூகித்து திருப்தியுறலாம்.

இங்கிலாந்தில் இருந்து தனி தனியாக புறப்படும் அர்ஜுனும், அனுவும் பெங்களூரு இரயில்வே நிலையத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். பயணச்சீட்டு பரிசோதகரிடம் மாட்டி வழியிலேயே இறக்கப்படுகின்றனர். அர்ஜூன் பையில் அவனது பாட்டி அவனுக்கு தெரியாமல் வைத்து அனுப்பும் அவனது தந்தை சேகரின் 1985ஆம் ஆண்டு நாட்குறிப்பேட்டைப் படிக்கத் தொடங்குகிறான். மீனாள் என்ற பெண்ணை காதலித்ததுப் பற்றிய விவரங்கள் சேகரால் அந்நாட்குறிப்பேட்டில் எழுதப்பட்டிருக்கும். ஒன்றாய் பயணிக்கும் அர்ஜூன், அனுவிற்கு நடுவில் காதல் மலர்ந்ததா, காதல் சம்பவித்த சேகரும், மீனாளும் ஒன்று சேர்ந்தனரா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.


ஆர்யா. முதல் முறையாக தந்தை, மகன் என இரட்டை வேடங்களில். படிந்த வாரிய தலையுடன், பணிவான முக பாவங்களுடன், முழுவதும் மழிக்கப்பட்ட கன்னங்களுடனும் தந்தை சேகர் என்னும் பாத்திரத்தில் வசிகரிக்கிறார். நடிக்க பெரிதாய் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. இந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயா. 'கண்டேன் காதலை' தமன்னா போல அனு பாத்திரத்தை கலகலப்பாக தோற்றுவிக்க முயன்றுள்ளனர். அந்த முயற்சியின் விளைவை திரையில் காணும் பேறு பெற்றவர்கள் அபாக்கியசாலிகளாக தான் இருப்பார்கள். எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நாயகியை அசடியாக காட்டி உள்ளனர்.

ப்ரீத்திகா ராவ். படத்தின் நாயகி 'மீனால்' பாத்திரம் என்றே சொல்லலாம். நடிக்க பல சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் சோபிக்கவில்லை. வடநாட்டு வரவான அவர் முகம் மனதில் பதியும் முன், அனு அர்ஜுன் இரணைகளுக்கான காட்சிகள் இடையிடையில் தோன்றுகிறது.

அனூப் குமார். ஆர்யாவின் அசட்டு நண்பராக. நினைவு தெரிந்த நாள் முதல் முறைப் பெண்ணான மீனாள் மீது காதல் கொண்டிருக்கும்; காவல்த் துறை ஆய்வாளர் பயிற்சியில் சொதப்பும் பாத்திரம்.  ஜெகன், சந்தானம், பாண்டு, சுவாமிநாதன் ஆகியோர் படத்தின் கலகலப்பிற்கு உதவுகின்றனர். இருப்பினும் படம் முழுவதும் இருக்க வேண்டிய கலகலப்பு காணப்படவில்லை.

'கலோனியல் கசின்ஸ்' குழு இரட்டையர்களான ஹரிஹரன் -லெஸ்லி லெவிஸ்'சின் இசையில் பாடல்கள் சோபிக்கவில்லை. ப்ரவின் மணியின் பிண்ணனி இசைக்கும் அதே கதி. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்களும் திராபையாகவே உள்ளது.

படத்தில் பிரகாசிப்பது ஆர்.பி.குருதேவ்வின் ஒளிப்பதிவு மட்டுமே. சேகர் வரும் காரைக்குடி காட்சிகள் மற்றும் அர்ஜுன் வரும் காரைக்குடி காட்சிகள் என்ற இரண்டின் கால அளவையும் ஒளி அமைப்புகள் மூலம் வித்தியாசத்தினை உணர செய்கின்றனர். அதே போல படத்தில் வரும் அக்கால ஜீப், கல்யாண வீட்டு அலங்காரங்கள், காவல்த் துறை ஆய்வாளர் பயிற்சித் திடல் என கலை வடிவமைப்பில் பிரமாதப்படுத்தி உள்ளனர். படத்தில் வரும் காட்சி இடங்களும் கவரும் வண்ணமே உள்ளன. படத்தின் உடை அமைப்பாளரின் பங்கையும் தனித்து குறிப்பிடும்படி கவனத்தினை உடைகள் ஈர்க்கின்றன.

மறைந்த இயக்குனர் ஜீவாவின் உதவியாளரான மணிகண்டனின் முதல் படம். மெனக்கெடல் இல்லாத சுவாரசியமற்ற திரைக்கதையால் சோடைப் போகிறார். பரபரப்பு, விறுவிறுப்பு ஏதுமற்று விச்சிந்தியாக படம் பயணிக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல். தலைப்பு தோன்றும் பொழுது வரும் சில நொடி அனிமேஷன் ரசிக்கும்படி உள்ளது. காவல்த் துறை ஆய்வாளர் பயிற்சியில் இருந்து காதலை தியாகம் செய்து திடுதிப்பென்று ஆர்யா லண்டன் செல்கிறார் போன்ற மொண்ணைக் காரணங்கள் இயல்பாய் எழும் கொட்டாவியையும் நீர்த்துப் போக வைத்து விடுகிறது. எப்படி முடியும் என்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்காமல், 'எப்படா முடியும்?' என்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.

0 Response to "சிக்குபுக்கு"

Post a Comment