ஈசன்

980-களில் வாழ்ந்த கீழ்தட்டு கிராம இளைஞர்களின் வாழ்வையும், அவர்களை சீரழித்த கீழ்மட்ட அரசியலையும் 'சுப்ரமணியபுரத்தில்' காட்டிய சசி இந்த முறை எடுத்திருப்பது 2010-ல் சென்னை போன்ற ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வாழும் இளைஞர்களை, அவர்களின் கலாச்சாரத்தை, கோடிகள் புழங்கும் ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன் மற்றும் அவனின் நண்பர்கள் செய்யும் தவறினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதை.


வைபவ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் ஒரு பெரிய அரசியல்வாதியின் பையன். அவருக்கு மூன்று நெருங்கிய நண்பர்கள்... அவர்களின் பொழுதுபோக்கே பப்புகளில் தண்ணி அடிப்பது பெண்களுடன் படுக்கையை பகிர்வது... வைபவிற்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வருகிறது... அவள் விஜய் மல்லையா போன்ற ஒரு பெரிய பிசினஸ்மெனின் ஒரே மகள்... அவர் இந்த கல்யாணத்திற்கு சம்மதிக்க மறுக்கிறார்... வைபவின் தந்தை எப்படியாவது மகனுக்கு அவளை கல்யாணம் பண்ணி சொத்துக்களை எல்லாம் சுருட்ட வேண்டும் என்று அந்த பெண்ணிடம் நல்லவர் போல நடித்து அவளை தற்கொலைக்கு முயற்சி செய்ய வைத்து அவள் அப்பாவின் மனதை மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்... இந்நிலையில் வைபவை யாரோ கடத்தி கொண்டு போய் விடுகிறார்கள்... அது யார்? வைபவ் என்ன ஆனார் என்பதே மீதி கதை.

பப்பில் இன்றைய நகர இளஞர்களின் குடி ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கும் படம், பப்பில் இருந்து ஒரு பெண்ணை சேசிங் செய்யும் இளைஞர்கள் அதனை தொடர்ந்து விபத்து என சுவாரசியமாக தொடங்கியது. ஆனால் சற்று நேரத்திலேயே திரைக்கதையும் போதை தலைக்கு ஏறியது போல் மந்தமாகி விடுகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் படத்தின் கதையை இயக்குநர் தெளிவுபடுத்தவே இல்லை, அவ்வளவு குழப்பம். அரசியல்வாதி மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் முன்பாதி காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளது. அதிலும் நமோ நாராயணின் ('நாடோடிகள்' படத்தில் பந்தா அரசியல்வாதியாக வருபவர்) கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கிறது.

இதுவரை நாம் பார்த்திராத மிகவும் இயல்பான போலீஸ் அதிகாரியாக அசத்தியிருக்கின்றார் சமுத்திரக்கனி. 'நாடோடிகள்' அபிநயா இரண்டாம் பாதியில் வருகிறார்.. வழக்கமாக தமிழ் சினிமாவில் பழிவாங்கும் கதை என்றால் ஒரு பிளாஷ்பேக் இருக்கும் அல்லவா அப்படி ஒரு பிளாஷ்பேக்கில்தான் அம்மணி வருகிறார்... பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடல் வலிகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் நடிப்பில். பின் பாதியில் ஈசனாக வரும் துஷ்யந்தின் நடிப்பு அருமை.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான வைபவ், அபர்ணா இருவரும் பப்பில் குடித்துகொண்டே இருகின்றனர். நம் பசங்க எவ்வளவோ ஹைடெக்கா சுற்றினாலும் கல்யாணம் என்று வரும்போது நிச்சயம் பப்பில் பெண் பார்க்க மாட்டர்கள். இவர்கள் காதல் முழுவதும் செயற்கையாகவும், கதைக்கு சம்பந்தம் இல்லாமலும் உள்ளது. படத்தின் வசனங்களிலும், கதாபாத்திரங்களின் நடிப்பிலும் சசி தெரிகிறார். குறிப்பாக அரசியல்வாதியாக வரும் ஏ.எல்.அழகப்பன் தன் மகனிடம் "என்னுடைய சொத்து எல்லாம் உனக்குதான். என்னுடைய பதவி உனக்கு கிடைக்கணுனா வேஷ்டிய எடுத்துக் கட்டு நாலு கல்யாணத்துக்கு போ. அப்பதான் நாலு போஸ்டர் அடிச்சி ஓட்டுவான்." என வாரிசு அரசியல் எப்படி உருவாகிறது என்பதை நச் என்று சொல்லியிருக்கிறார். இப்படி படம் முழுவதும் அட போட வைக்கும் காட்சிகளும் உள்ளது.

கமிஷனராக வரும் காஜா மொய்தீன் சிறப்பாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியிடம் ஒரு இடத்தில் இப்படிச் சொல்வார்: 'காலம் பூரா விரைப்பா இருந்தா காயடிச்சிருவாங்க... கடைசி 5 வருஷம் உன் நேர்மையைக் காட்டு. போதும்' -இந்தக் காட்சியில் அரசியல் வர்க்கத்தை அதிகாரிகள் வர்க்கம் எப்படி அனுசரித்துப் போகவேண்டும் என்பதற்கு புதிய இலக்கணமே எழுதியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால் மற்ற திரைக்கலைஞர்கள் போலவே சசிகுமாரின் பார்வையிலும் சென்னை அன்னியப்பட்டு இருப்பது கவலைப்பட செய்கிறது. "இங்கே யாரும் சிரிப்பதில்லை, உதவி என்று கேட்டால் கதவை சாத்திவிடுகிறார்கள்" போன்ற வசனங்களின் மூலம் சென்னை நகரத்தை சினிமா பாணியிலேயே பார்த்திருக்கிறார் சசிகுமார் (நல்ல வேலை "சிங்காரமான ஊரு இது சென்னையினு பேரு ஊரைச் சுற்றி ஓடுதமா கூவம் ஆறு" என்ற ரகத்தில் பாடல் எதுவும் வைக்காமல் இருந்தாரே!) சசியும் சென்னையை பற்றிய கருத்துக்களை பழைய சினிமாவில் பார்த்து அதையே தனது படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சென்னையின் பரபரப்பான வாழ்க்கை முறையில் சசி முன்வைக்கும் சில குறைகள் இருந்திருக்கலாம், ஒன்று அதை அழுத்தமாக சொல்லியிருக்கலாம், இல்லை பழிவாங்கும் படலத்தையும், அதன் காரணத்தையும் வித்தியாசப்படுத்தி சொல்லியிருக்கலாம், அதுக்காக இது இதுக்காக அது என்று இரட்டை சவாரி செய்திருக்கிறார் என்று சொல்லும் அளவில்தான் திரைக்கதை அமைந்திருக்கிறது.



ஒளிப்பதிவு, பாடல்கள் அனைத்தும் ஓக்கே ரகம். 'வந்தனமாம் வந்தனம்' பாட்டில் ஓப்பனிங்க் ஸ்டெப் அபாரம். கை தட்டலை அள்ளிக்கொள்கிறது. சோக வரிகள், ஆனால் கும்மாளமான இசை, துள்ளலான டான்ஸ் ஸ்டெப் என அருமையான கலவை. அதேபோல் விலைவாசி சுகவாசி பாட்டும் ஓக்கே.

'சசி' என்ற பெயருக்கு மட்டுமே ரசிகர் கூட்டம் அரங்கில் நிரம்பி வழிந்தது. பெரிய நடிகர்கள் இல்லாவிடினும். இந்த பாக்கியம் வெகு சிலருக்கே கிடக்கும் என்பது தாங்கள் அறியாததல்ல. இறுதிக்காட்சி நெருங்க நெருங்க அரங்கில் பலர் தங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என முணுமுணுத்தனர். பெண்கள் கூட்டத்தை 'ஈசன்' மூலம் தவற விடுவீர்கள் என தெரிகிறது. நிஜ கொலையையே மிஞ்சும் அளவுக்கு வன்மம் தேவையா?? நல்ல கதை அம்சத்துடன் களம் இறங்கி ஆங்காங்கே தடம் மாறி பயணிக்க வைத்துவிட்டார் 'ஈசனை'.

0 Response to "ஈசன்"

Post a Comment