நந்தலாலா
தன்னுடைய தனிப்பட்ட முத்திரையை தனது முதல் இரு படங்களில் அழமாக பதித்த மிஷ்கின், இம்முறை முதன் முறையாக இளையராஜாவை துணைக்கு அழைத்து, தானே கதையின் நாயகனாக களம் இறங்கி உள்ள படம்தான் நந்தலாலா. இரு வருடங்களுக்கு மேலாக கிடப்பில் கிடந்து தற்போது வெளிவந்து உள்ளது.

பக்கம் பக்கமாக அனல் பறக்கும் வசனங்கள் என்பது நமது தமிழ் சினிமாவின் தனிப்பட்ட சாதனைகளில் ஒன்றாகும். ஆனால் இந்த படத்தில் வசனங்களை குறைத்து காட்சிகளின் மூலமே படத்தை நகர்த்தி சென்று இருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகள் வெற்றி அடைய ஆபத்பாந்தவன் நம் ராஜாவே துணை. படத்தின் நிறைகளாக சொல்ல பல விசயங்கள் இருந்தாலும் அவற்றுக்கு எல்லாம் மகுடம் சூட்டுவது இளையராஜாவின் பின்னணி இசையே. இறைவனுக்கு லாலி பாடுவது போன்று நமக்கு இசை ஆராதனை செய்து உள்ளார். வசனங்கள் அற்ற காட்சிகளின் வீரியம் ராஜாவின் கை ஜாலத்தால் நம் மனதை அறைகின்றது. பேருந்து பயணத்தின் ஜன்னலோர தென்றல் காற்றாக பல இடங்களில் வருடி செல்கிறது. பாசம், தாய்மை, ஏமாற்றம், விரக்தி, ஆத்திரம், அழுகை, தனிமை என ராஜா படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப நம் மனதை கசிய வைத்து இருக்கிறார். ஆங்காங்கே சில இடங்களில் இசையை நிறுத்தி அமைதியையும் அளித்து உள்ளார். சுருக்கமாக ராஜாவின் ராஜாங்கம் தான் படமே.

ஐந்து பாடல்கள் இசைத்தட்டில் இருந்த போதும் இரு பாடல்கள் மட்டுமே படத்தில் உபயோகப்படுத்தி உள்ளனர். ராஜா பாடும் - "தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்து இருந்தேன்" - சிலிர்க்க வைக்கும் ரகம், ஜேசுதாஸ் பாடும் - "ஒன்னோக்கு ஒன்னு துணை இருக்கும் உலகத்திலே, அன்பு ஒன்னு தான் ஆனாதையா? - வருடும் ரகம்.
இது வரை திரைக்கு பின் நின்று ஆட்டிவித்த மிஷ்கின் தானே களம் இறங்கி உள்ளார். அவருக்குள் இருக்கும் நடிகன் மிக பிரமாதமாக வெளிப்பட்டு உள்ளான். அனைவரையும் அதட்டி அழைப்பதும், சுவரில் ஒரு விரலை வைத்துக் கொண்டு வருவது, அம்மா வை தேடி போகும் போது கூட ஒரு வீட்டின் கதவில் ஏறி விளையாடுவது என படம் முழுவதும் தன்னுடைய பாடி லாங்வேஜ் மாறாமல் நிறைவாக செய்து உள்ளார். சில ரவுடிகள் அவரை தாக்கும் போது அவர்களிடம் இருந்து தப்பித்து நெடுச்சாலை பைக் நண்பர்கள் அருகில் நின்று ஆக்ரோசமாக எம்பி குதிக்கும் காட்சி அவரின் நடிப்புக்கு ஒரு சான்று. மெண்டல் என்று அழைத்தால் கோவப்படும் மிஷ்கின் சிறுவன் கோபத்தில் மெண்டல் என்று சொல்லிவிட, கோபமாக அடிக்க ஒடி அவன் மீது இருக்கும் பாசத்தின் காரணமாக அடிக்க முடியாமல் குலுங்கி அழும் காட்சியில் நம் மனதை கொள்ளைக் கொண்டு போகிறார்.

இந்த இருவரும் தங்கள் பயணத்தின் போது சந்திக்கும் நபர்கள் அனைவருமே தங்களின் பங்களிப்பை நன்றாக அளித்து உள்ளார்கள். லாரி டிரைவர், லிப்ட் கொடுக்கும் தம்பதிகள், போலீஸார், காரில் லந்து பண்ணும் இளைஞர்கள், இளநீர் வியாபாரி, கால் ஊனமுற்ற மாற்று திறனாளி, இருசக்கர வாகனத்தில் வரும் இரு நபர்கள், வேசி வேடம் ஏற்று நடித்து இருக்கும் கத்தாழ கண்ணால பாடல் புகழ் ஸ்னிதா, ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் நாசர், ஸ்னிதாவை அடைய துடிக்கும் வயதான கிழவன், அஸ்வத் வீட்டு வேலையாள், அஸ்வத் தாய், மிஷ்கினின் தாய் ரோகினி என ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களும் அவர்களின் காட்சியமைப்பும் பாத்து பாத்து செதுக்கப்பட்டு உள்ளது.
வசனங்களை தவிர்த்து காட்சியமைப்பின் மூலமே அந்த காட்சியை நமக்கு அளித்து பார்ப்பவர்களை அதை உணர்ந்துக் கொள்ள செய்யும்படியான உத்தி மேற்சொன்ன கதாபாத்திரங்களின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கை கொடுத்து இருப்பது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு. ராஜாவிற்கு அடுத்து இவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. மிஷ்கின் படங்களில் எப்போதுமே வித்தியாசமான ஒளிப்பதிவை காணலாம். இப்படத்திலும் அந்த விஷ்வல் டீரிட் நமக்கு கிடைத்து இருக்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியில் சிறுவன் தன் பாட்டியை பாத்ரூமில் விட்டு தன்னுடைய அறைக்கு வந்து தன் தாய் புகைப்படத்தை எடுத்து ஒரு முத்தம் கொடுத்து, பின்பு சென்று தன் பாட்டியை அழைத்து வரும் என ஒரு நீண்ட ஷாட். முதுகுக்கு கூட க்ளோசப் ஷாட் வைத்து அதையும் ரசிக்கும்படியாக மாற்றுவது சுலபம் அல்ல. அதை திறம்பட செய்து உள்ளார் மகேஷ். பசுமையான வயல் வெளிகளும் நீண்ட சாலைகளும் நாமே பயணப்படுவது போன்ற உணர்வைத் தருகின்றது.

மிஷ்கினின் கடந்த படங்களை போலவே இந்த படத்திலும் கதையின் நாயகர்கள் இருவரும் பல காட்சிகளில் தலை குனிந்தே நிற்கின்றார்கள். அது ஏன் என்றே புரியவில்லை. அதே போல் பாதங்களை கேமிரா தொடர்வது, சில நேரங்களில் அது நன்றாக இருந்தாலும் போக போக ஒரு சலிப்பை தருகிறது. சண்டை காட்சிகளின் போது அனைவரும் சுற்றி இருந்தும் ஒருவர் பின் ஒருவராக வந்து அடிப்பது போன்ற காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்கும் காட்சிகள். மிஷ்கின் அடுத்த படத்திலாவது உங்க டெம்ப்ள்ட்டை மாற்றினால் நல்லா இருக்கும்.
சிறு வயதில் மிஷ்கினை காப்பகத்தில் விட்டு செல்லுபவர்கள், மீண்டும் ஏன் வந்து அவரை சந்திக்கவில்லை என்பது கேள்விக்குறி. அஸ்வத் திற்கு பணம் அனுப்பும் அவன் தாய், தான் வேறு ஒரு வாழ்க்கை வாழும் போதும் தன்னுடைய அடையாளங்களை (விலாசம்) தன் மகனிடம் மறைக்காமல் இருப்பது, ரோகினி யின் பாத்திரப்படைப்பு, பேருந்தில் தனியாக அமர்ந்து இருக்கும் அஸ்வத் திடம் நான்கு நபர்கள் தனித் தனியாக என்ன தம்பி தனியாகவா போற என மாற்றி மாற்றி கேட்கும் காட்சி சுத்த நாடகத்தனம். மிஷ்கின், அஸ்வத் இருவரும் தங்களை விட்டுச் சென்ற தாய் மீது மட்டுமே கோபம்/பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். நம் சமூக சூழலுக்கு ஏற்ற மாதிரி வசதியாக தந்தையை பற்றி ஒடி போயிட்டான் என்ற ஒரு வரி வசனத்தோடு முடித்து இருப்பது மொக்கைத்தனம். இது போன்ற ஏன் என்ற பல கேள்விகளும், நாடகத்தனமான காட்சி அமைப்புகளும் படம் முழுவதும் ஆங்காங்கே சிதறித்தான் கிடக்கிறது.
இருந்தும் இது போன்ற படைப்புகள் தமிழில் வருவது தமிழ் சினிமாவிற்கும், ரசிகர்களுக்கும் ஒரு ஆக்கப்பூர்வமான விடயம். படம் மெதுவாக நகர்ந்தாலும் ஆழமான தாக்கத்தை நம்முள் எழுப்பத் தவறவில்லை. மொத்தத்தில் நந்தலாலா - ராஜாவின் தாலாட்டுடன் கூடிய தாய்மையை தேடும் உணர்வுப்பூர்வமான ஒரு பயணம்.
Image Source : India Glitz
0 Response to "நந்தலாலா"
Post a Comment