மைனா

 


மைனா- முண்ணனி நாயகன், நாயகி நடித்திராத இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் விநியோகிக்க முடிவு செய்தது முதல் படத்திற்கான ஓர் எதிர்பார்ப்பு விதைக்கப்பட்டு விட்டது.

தீபாவளிக்கு முன் தினம் சுரளி என்னும் கைதி சிறையில் இருந்து தப்பிக்கிறான். அவனை எப்படியும் பிடித்து விட வேண்டுமென இரண்டு சிறை அதிகாரிகள் சுரளியின் மலை கிராமத்திற்கு செல்கின்றனர். தீபாவளி அன்று காலை மைனா என்னும் தன் காதலியின் திருமணத்தை நிறுத்த முனைகிறான் சுரளி. அந்த அமளியின் பொழுது அங்கு வரும் சிறை அதிகாரிகள் சுரளியையும், மைனாவையும் அழைத்துக் கொண்டு செல்கின்றனர். அப்பயணத்தின் பொழுது நடக்கும் நெகிழ்ச்சியான சம்பவங்களால் மனம் மாறும் சிறை அதிகாரி சுரளியை அன்புடன் சிறையிலும், மைனாவை பாசத்துடன் வீட்டிலும் தங்க வைக்கிறார். தீபாவளியின் அடுத்த நாள் மைனாவிற்கும், சுரளிக்கும் கல்யாணம் ஆனாதா என்ற கேள்விக்கு பதிலுடன் நிறைவுறுகிறது படம்.

விதார்த நாயகனாக. சுரளியாகவே வலம் வந்துள்ளார். சின்ன உரசலில், காதல் கிரக்கத்தில் தலையை நடு நடுவில் சிலுப்பதை தவிர அவர் நடித்துள்ளார் என்றே சொல்ல முடியாது. அன்றாட வாழ்வில் நாம் காணும் ஒருவரை போலவே படம் நெடுக உணர வைக்கிறார்.

அமலா பால் நாயகியாக. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே கல்யாணத்திற்கு தயாராகி விடும் மைனாவாக நடித்துள்ளார். சுரளியுடனான ஒரு நிறைவான வாழ்க்கை குறித்த கனவுகளை தன் பெரிய கண்களில் சுமக்கிறார்.

தம்பி ராமைய்யா. சிறை அதிகாரியாக வந்து படத்தின் கலகலப்பிற்கு முயற்சிக்கிறார். திரையுலகில் பழம் திண்ணு கொட்டைப் போட்டவர் என்பதை அவர் நடிப்பில் தெரிகிறது. கைதிகளிடம் மரியாதையாக விளித்து விட்டு, தனது உயரதிகாரியையும் சமாளிப்பது என அசத்துகிறார்.

சேது. பாஸ்கர் என்னும் சிறை உயரதிகாரியாக எடுப்பாக உள்ளார். வசனங்கள் உதவி இல்லாமலே சில காட்சிகளில் தன் எரிச்சலையும், கோபத்தினையும் சில பார்வைகளில் வெளிபடுத்துகிறார்.

பருத்தி வீரனில் 'பொனந்தின்னி'யாக வருபவர் இதில் மற்றவரிடம் பிடுங்கி சீட்டு விளையாடும் நாயகனின் தந்தையாக கலக்கியுள்ளார். கார்த்திக் என்னும் சிறுவன் 'மண்ரோடு மணிக்கம்' என்ற பெயரில் நாயகனின் நண்பனாக வயதிற்கு மீறி அராத்துபவனாக அசத்தியுள்ளான்.

இமானின் இசை சொல்லிக் கொள்ளும்படி உள்ளது. இனி இமானின் பெயர் கேட்டால் மைனா ஞாபகம் வரும். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தின் மாபெரும் பலம். படத்தில் வரும் பச்சைப் பசேல் மலைகளும், அதை சுக்மார் படமாக்கிய விதமும் அவ்ளொ அருமை. கரடு முரடான மலைப் பாதைகளில் ஜீப்பின் சக்கரங்களை நெருக்கத்தில் காண்பித்து ஜீப்புடன் கேமிரா பயனப்படுவது என தன் பங்கிற்கு ஒளிப்பதிவும் பல கதைகள் சொல்கின்றன. வைரபாலனின் கலையில் குழி பணியார போடும் குழிவு தட்டுக்கள் முதல் அந்தரத்தில் சிக்கித் தொங்கும் பேருந்து வரை அனைத்தும் கச்சிதமாக திரையில் தெரிகிறது.

பிரபு சாலமன். கண்ணோடு காண்பதெல்லாம், கிங், கொக்கி, லீ, லாடம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழில் இது அவரது ஆறாவது படம். அந்த படங்களில் கிடைக்காத பெயரும், புகழும் மைனா கண்டிப்பாக வாங்கி தரும். ஒரு கைதி தப்பித்து விட்டால் சிறை அதிகாரிகளுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை அழகாக சொல்லியுள்ளார். பாத்திர வார்ப்புகளில் 'பருத்தி வீரன்' படத்தின் சாயல் பெருமளவு பிரதிபலிக்கிறது. யூகிக்க முடிந்த கதை எனினும் திரைக்கதையில் யூகிக்க முடியாத ஏகப்பட்ட திருப்பங்கள் வருகின்றன. ஒரு பெரும் பேருந்து விபத்து காட்சி முடிந்ததும் அதை மறக்கடிக்கும் அளவிற்கு மிக நீள வசன அறுவை வருகிறது. அதனால் காட்சிகளின் தாக்கம் ஒரே போலில்லாமல் நம்மை அலைக்கழிக்க வைக்கிறது. சின்ன தம்பி காலம் தொட்டு 'திமிரு' பிடித்த அண்ணன் குழுக்கள் தமிழ்ப் படங்களில் வருவது போல் இப்படத்திலும் வருகின்றனர். ஆனால் சிறை உயரதிகாரியின் மனைவியோட அண்ணன்களாக. தவறு செய்யும் கெட்டவர்களுக்கு தண்டனை அளித்தே ஆக வேண்டுமென்ற இயக்குனரின் பொறுப்புணர்ச்சி படத்தின் முடிவில் தெரிகிறது. கைதியோடு சிறை அதிகாரிகள் பயணிப்பதை 'காதலின் பயணம்' என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் உப தலைப்பு தந்துள்ளனர்.

மைனா- பசும் மலைகளின் சில்லென்ற அரவணைப்பில் பறக்கிறது

0 Response to "மைனா"

Post a Comment