உடல் உறுப்புகள் – சருமம்
இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் உடலோடு தொடர்பு கொண்டவை. அத்தகைய உடலை பேணி பாதுகாத்தால் தான் நீண்ட ஆரோக்கியததைப் பெற முடியும்.
மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் மிகவும் இன்றியமையாததாகும். அவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடல் முழுமையாக பாதிப்படையும்.
இத்தகைய உறுப்புகளில் தோல் அதாவது சருமமும் ஒன்று. மனித உடலின் மிகப் பெரிய உறுப்பும் தோல்தான். அத்தகைய தோல் உடலின் உள்ளே உள்ள தசைகள், எலும்பு, இதயம், நுரையீரல் போன்ற அனைத்து உறுப்புகளையும் பாதுகாக்கிறது.
உடலுக்குள் எந்தவிதமான அன்னியப் பொருட்களும் உட்புகாதபடி பாதுகாக்கிறது. புறச் சூழ்நிலைக்கேற்ப உடலின் வெப்பநிலையை சீராக்குகிறது. சருமம்தான் ஒருவனுக்கு புற அழகைக் கொடுக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தோலை 3 உட்பிரிவாகப் பிரிக்கின்றனர்.
1. மேற்புறத்தோல்
2. நடுத்தோல்
3. உட்புறத் தோல்
மேற்புறத் தோல்
நாம் கண்களால் பார்க்கும் வெளிப்பகுதி இதுதான். இதன் மேல் ஏதேனும் ஒரு பொருள் பட்டால் உடனே மூளைக்கு தகவல் அனுப்பி, கைகளை அந்தப் பகுதிக்கு கொண்டுவரும் தூண்டல் சக்தியைக் கொண்டது. வெளிப்புறம் நுண்ணிய பொருள்கள் ஏதும் நுழைய விடாமல் தடுக்கிறது. இதன் மேல்புறத்தில் பலகோடி துளைகள் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளன. இதன் வழியாகத்தான் வியர்வை வெளிவரும்.
வெளிப்புறத் தோலில் பல கோடி செல்கள் உள்ளன. இவற்றின் மேற்பகுதியில் நிமிடத்திற்கு 30,000 முதல் 40,000 செல்கள் இறந்து உதிர்கின்றன. ஆனால் அதற்கேற்றார்போல் அடிப்பகுதியிலிருந்து புதிய செல்கள் மேல்நோக்கி வருகின்றன. இதனால் இப்பகுதி மிகுந்த பாதுகாவலனாக வேலை செய்கிறது. உதிரும் செல்களின் அளவு வருடத்திற்கு 4 கிலோ அளவு இருக்கும்.
மேலும் இதிலுள்ள மெலானின் என்ற நிறமிகள் சருமத்திற்கு நிறத்தைக் கொடுக்கின்றன. இந்த நிறமிகள் குறைந்தால் உடல் சிவந்து காணப்படும். இந்த மெலானின் நிறமிகள் சூரிய வெளிச்சத்திலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்கிறது. தோலில் உருவாகும் புற்றுநோயைத் தடுக்கிறது.
வெளிப்புறத் தோல் பகுதிதான் பல வகையான புறச் சூழ்நிலைக் கிருமிகளால் அலர்ஜியுறுகின்றன. இதனால் மேல்பகுதியில் வெண்புள்ளிகள், படர்தாமரை, தேமல் போன்ற வியாதிகளின் வெளிப்பாடு தெரிய வருகிறது.
இப்பகுதியை தினமும் சுத்தம் செய்வது நல்லது. தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மென்மையான சோப்புகளை பயன்படுத்த வேண்டும். அதிக குளிர், அதிக சூடு உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது, அதன் தாக்கம் நேரடியாக சருமத்தைத் தாக்கா வண்ணம் ஆடைகளை பயன்படுத்துவது நல்லது.
இரசாயனக் கலப்படம் மிகுந்த பொருட்களை உபயோகிப்பதைத் தவிர்த்து இயற்கைப் பொருள்களை உபயோகிப்பது மிகவும் சிறந்தது.
நடுத்தோல்
இது கண்களுக்குத் தெரியாத பகுதியாகும். இதில்தான் உணர்வு நரம்புகள் முடிவடைகின்றன. இரத்த நாளங்கள் உள்ளன. எண்ணெய் சுரப்பி, வியர்வை சுரப்பிகள் அமைந்துள்ளன.
வெளிப்புறத் தோலில் மற்ற பொருட்கள் படுவதை இங்குள்ள உணர்வு நரம்புகள் அனிச்சை செயல் மூலம் மூளைக்கு உடனே தகவலை அனுப்புகிறது. உடனே கைகள் அங்கு செல்ல மூளை உத்தரவிடுகிறது. இந்த நிகழ்வுகள் நொடியில் நிகழ்ந்து விடுகிறது.
இப்பகுதியில்தான் இரத்த நாளங்கள் மென்மையாகவும் சிறு சிறு நாளங்களாகவும் பிண்ணிப் பிணைந்துள்ளன. இவற்றின் முக்கியப் பணி இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதுடன் வெளியேற்ற வேண்டிய கழிவுகளையும் வியர்வைத் துளை வழியாக வெளித்தள்ளுகிறது.
வெளிப்புறத் தோலில் ஏற்படும் பாதிப்புகளை உடனே சரிசெய்யும் பணியை நடுத்தோல் பகுதி சிறப்பாக செயல்படுத்தும். இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் உள்ளன. இதனை சிபாசியஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவர். இது உற்பத்தி செய்யும் எண்ணெய் சீபம் என்று அழைக்கப்படுகிறது. இது உடல் உற்பத்தி செய்யும் இயற்கை எண்ணெய் ஆகும். இந்த எண்ணெயால் தோல் பகுதி சுருங்கி விரிவதற்கு ஏதுவாக அமைகிறது. இது உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறாதபடி தடுக்கிறது. இது நன்கு உற்பத்தியானால் தோல் நீரை உள்வாங்காது.
வியர்வைச் சுரப்பிகளில் சுரக்கும் வியர்வையுடன் இந்த எண்ணெயும் சேர்ந்து வெளியேறுகிறது. இதனுடன் அசுத்த நீர்களும் வெளியேறும்.
உட்புறத் தோல்
இது தோலின் அடிப்பகுதியாகும். இப்பகுதி கொழுப்பு நிறைந்த பகுதியாகும். இப்பகுதி, தோலில் ஏற்படும் புற மாற்றங்களுக்கு தகுந்து மாறும் தன்மை கொண்டது. உடலின் வெப்பநிலை, குளிர் போன்ற திடீரென்று ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உடலின் தன்மையை மாற்றி பாதுகாக்கும்.
இப்பகுதியில்தான் மயிர்க்கால்கள் உற்பத்தி ஆகின்றன. மயிர்க்கால்கள் வெளிவருகின்றன. உள்ளங்கை, உள்ளங்கால், உதடுப்பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் முடி வளரும். இப்பகுதி அடிப்பகுதியாக இருப்பதால் உணவு மாறுபாட்டால் உண்டாகும் பாதிப்புகளால் இப்பகுதியும் பாதிக்கப்படும்.
பொதுவாக வெளிப்புறத்தில் குளிர் மற்றும் அதிக சூட்டுக்குத் தகுந்தவாறு உடலின் உள்புற பகுதியை மாற்ற தோலில் உள்ள இரத்த நாளங்கள் வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு உடலில் வெப்ப சமநிலையை ஏற்படுத்தும்.
உடலின் வெப்பநிலையை 98.60ஊ ஆக இருக்க வேண்டும். அதாவது 370 செல்சியஸ் இருக்க வேண்டும். இதில் மாற்றம் உண்டானால் உணர்வு நாளங்கள் மூளைக்கு செய்தியை அனுப்பி அங்குள்ள ஹைபோதாலமஸ் என்ற பகுதியைத் தூண்டி அவை உடலின் வெப்ப நிலையை இரத்த நாளங்களுக்கு செய்திகளை அனுப்பி உடலுக்குத் தேவையான உஷ்ணத்தை கொடுக்கிறது. இதனால் கை, கால் முகம் சில சமயங்களில் சிவந்து காணப்படும்.
இதுபோல் உடல் சூடு அதிகமானால் அவை வியர்வை சுரப்பிகளைத் தூண்டி அதன்மூலம் வியர்வையும், உஷ்ணத்தையும் வெளியேற்றுகிறது.
சருமத்தைப் பாதிக்கும் நோய்கள்
சிரங்கு, படை, கரப்பான், அக்கி, தொழுநோய் அலர்ஜி போன்றவை சருமத்தைப் பாதிக்கும் நோய்களாகும்.
சருமத்தைப் பாதுகாக்க
· தினமும் இருவேளை குளிக்க வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
· இறுக்கமான ஆடைகள் மற்றும் ஈரமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
· உடலில் உள்ள வியர்வை நன்கு வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்வது நல்லது.
· உச்சி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி அலைய நேரிட்டால் அதிக நீர் அருந்துவது அவசியம். மென்மையான பருத்தியினால் ஆன ஆடைகளை அணிய வேண்டும்.
· வாசனை திரவியங்கள் சில சமயங்களில் ஒவ்வாமையை உண்டுபண்ணும். முடிந்தவரை இயற்கை வாசனைப் பொருட்களை உபயோகிப்பது நல்லது.
· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் சருமம் பளபளப்பதுடன், உடலின் உள்உறுப்புகள் பலப்படும்.
· அதிக மன அழுத்தம், கோபம் முதலியவற்றை தவிர்க்கவேண்டும்.
உடலின் உள்ளே உள்ள உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது, சருமத்தின் வழியேதான் வெளிப் படும். இதனால் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவது மிகவும் அவசியம்.
0 Response to "உடல் உறுப்புகள் – சருமம்"
Post a Comment