திருக்கார்த்திகைத் திருநாள்

இறைவனை ஒளிவடிவாகக் கண்டனர் முன்னோர். அதனால் தான், கண்கண்ட தெய்வங்களாக சூரியன், சந்திரன், பிற கிரகங்களை வணங்கினர். நவக்கிரகங்களுக்கு மண்டபமே கட்டினர். சிவபெருமானுக்குரிய கண்களாக சூரியன், சந்திரன், நெற்றிக்கண்ணாக அக்னி ஆகிய ஒளிதெய்வங்கள் இருப்பதாக நம்புகின்றனர். அக்னி இல்லாமல் உலகம் இல்லை. ஆன்மிகத்திற்கு அடிப்படையே நெருப்பு தான். யாக குண்டங்களில் அக்னி மூட்டி, அந்த அக்னியே குண்டத்துக்குள் போடப்படும் பொருட்களை (அவிர்பாகம்) அந்தந்த தேவர்களிடம் சேர்ப்பதாக நம்புகிறோம். அந்த அக்னி வடிவாக இறைவனே காட்சியளித்த நாள் தான் திருக்கார்த்திகை. மனிதனுக்கு அகங்காரம் கூடாது என்பதை உணர்த்த, எவ்வித நாடகம் ஆடலாம் என, முப்பெரும் தெய்வங்களும் முடிவு செய்தனர். அதற்கான அரங்கேற்றம் துவங்கியது. ஒருமுறை, பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. உயிர்களைப் படைப்பதால், தானே பெரியவன் என பிரம்மா கூறினார். அவற்றைப் பாதுகாப்பதால், நானே உயர்ந்தவன் என திருமால் வாதிட்டார். இந்த வழக்கு சிவனிடம் சென்றது.
அவர் ஒரு போட்டி வைத்தார். "நான் விஸ்வரூபமெடுத்து மேலும் கீழுமாக நிற்பேன். பிரம்மா என் உச்சியையும், திருமால் என் பாதங்களையும் கண்டு வர வேண்டும். யார் முதலில் கண்டு வருகின்றரோ அவரே உயர்ந்தவர்...' என்றார். இருவரும் ஒப்புக்கொண் டனர். நெருப்பு வடிவாக விஸ்வரூபமெடுத்தார் சிவன். அன்னப்பறவை வடிவெடுத்து மேல்நோக்கி பறந்தார் பிரம்மா. வராக (பன்றி) ரூபமெடுத்து, பாதாளத்திற்குச் சென்றார் திருமால். அவரால் சிவனின் பாதங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கீழே போகப் போக சிவனின் உருவமும் நீண்டுகொண்டே போனது; அவர் திரும்பி விட்டார். பிரம்மாவுக்கும், இதே நிலை தான். ஆனால், தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத அவர், சிவனின் சிரசைப் பார்த்துவிட்டு வருவதாக பொய் சொன்னார். சிவன் அவரது பதவியைப் பறித்து, தண்டித்தார். நாம் ஒரு செயலைத் துவங்கி, அது முடியாமல் போனால், தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். இல்லாவிட்டால், பெரும் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. திருமால், தன் தோல்வியை ஒப்புக்கொண்டதால், அவரது பணிக்கு பங்கம் வரவில்லை. பிரம்மா பொய் சொன்னதால், அவரது பதவியே போய்விட்டது. சிவனின் நெருப்புக்கோளம் ஒரு மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலை. இதனால் தான், இங்கு கார்த்திகை திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிவனின் நெருப்பு வடிவத்தையே சொக்கப்பனையாகக் கொளுத்துகிறோம்.
சிவன் கோவில்களுக்குச் சென்றால், கருவறையின் பின்பக்கம், "லிங்கோத்பவர்' விக்ரகம் இருக்கும். தலையையும், காலையும் மறைத்து இது வடிக்கப்பட்டிருக்கும். இது சிவனின் விஸ்வரூப வடிவம். இந்த சிலையின் தலையை நோக்கி அன்னப்பறவையும், கீழ்நோக்கி பன்றியும் செல்வது போல செதுக்கியிருப்பர். இவரை வணங்குவதே, நம் மனதிலுள்ள கர்வம் அடியோடு அழியவேண்டும் என்பதற்காகவே! கார்த்திகை திருநாள் அக்னியில் நம் மனதிலுள்ள கர்வத்தைப் பொசுக்குவோம்; இறைவனால் மட்டுமே எதுவும் நடக்குமென்று நம்புவோம்

0 Response to "திருக்கார்த்திகைத் திருநாள்"

Post a Comment