பதவி உயர்வுக்காக `பாலியல் சலுகை’

இன்று பெண்கள் பணிபுரியாத துறையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. சில இடங்களில் மெஜாரிட்டியாக ஆதிக்கம் செலுத்து கிறார்கள் அவர்கள். ஆனாலும், பெரும்பாலான பெண்கள் சொல்லி வைத்ததுபோன்று ஒரே ஒரு தொந்தரவுக்கு தொடர்ந்து உள்ளாகுகிறார்கள். அதுதான் பாலியல் தொந்தரவு!
இந்த தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவளை மட்டம் தட்ட நினைக்கும் அதிகார ஆண்களும் தொந்தரவுக்கு உட்படுத்தி சுகம் காண்கிறார்கள். கூட்டமாக கூடி நின்று குறிப்பிட்ட பெண்ணை தவறாக வர்ணித்தல், அவளது கையை பிடித்து இழுத்தல் ஆகிய தொந்தரவுகளும் அதில் அடங்கும்.
மனீஷாவுக்கு 29 வயது. என்ஜினீயரிங் படித்துள்ள இவள் சென்னையில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தாள். தகுதி, திறமை, அழகு… என்று எல்லாம் இருந்தும் 5 ஆண்டுகளாக ஒரே பதவியிலேயே இருந்தாள். பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் கூட அவளது பெயர் சேர்க்கப்படவில்லை.
அவள் பணிபுரிந்த நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. தன்னுடன் படித்து, பிற நிறுவனங்களில் சேர்ந்த தனது தோழியர் சிலர், தன்னைவிட உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டதால் இவளும் தன் மேல் அதிகாரியிடம் தனது பதவி உயர்வு பற்றி பேசினாள்.பெரும்பாலும் யாரிடமும் சிரித்துப் பேசாமல் முகத்தை `உம்’மென்று விரைப்பாக வைத்திருக்கும் அந்த அதிகாரி, `ப்ரமோஷன் வேண்டும்’ என்று மனீஷா கேட்டதும் முகத்தை திடீர் சந்தோஷத்திற்கு மாற்றினார்.
“உனக்கு இல்லாத ப்ரமோஷனா? விரைவில் ஏற்பாடு செய்கிறேன். நான் எதிர்பார்க்கும் தகுதிகள் உன்னிடம் இருக்க வேண்டும். அந்த தகுதி தேர்வில் நீ தேர்ச்சி பெற்றுவிட்டால் அடுத்த மாதமே டபுள் ப்ரமோஷனுக்கு ஏற்பாடு செய்கிறேன்…” என்று வழிந்தார் 50 வயது தாண்டிய அந்த அதிகாரி.
அந்த அதிகாரியின் பதில் மனீஷாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. `ப்ரமோஷன் வேண்டும்… என்று இப்போதுதான் கேட்டேன். உடனே, டபுள் ப்ரமோஷன் தருகிறேன் என்கிறாரே… நாம்தான் லேட்டாக கேட்டு இருக்கிறோமோ… எப்போதோ கேட்டிருந்தால், அப்போதே ப்ரமோஷன் கிடைத்து இருக்குமே…’ என்று மனதிற்குள் சிலிர்த்தவாறே அங்கலாய்த்துக் கொண்டு தனது கேபினுக்கு திரும்பினாள்.
மனீஷா தனது சீட்டில் அமர்ந்த அடுத்த நிமிடமே அவளது விலை உயர்ந்த செல்போன் லேசாக பளிச்சிட்டு அமைதியானது. புதிதாக ஒரு எஸ்.எம்.எஸ். வந்திருந்தது. அதை திறந்து பார்த்தாள்.
சிறிதுநேரத்திற்கு முன்பு எந்த அதிகாரியிடம் தனது ப்ரமோஷன் பற்றி பேசிவிட்டு வந்தாளோ, அதே அதிகாரிதான் ஒரு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதை படித்துப் பார்த்தாள். ஒரு கணவன், தன் மனைவியிடம் உரிமையோடு கேட்பதுபோல் இருந்தது அந்த எஸ்.எம்.எஸ். அதற்குள் கொஞ்சம் ஆபாசமும் ஒளிந்திருந்தது.
அதைக்கண்டு திடுக்கிட்ட அவள், ஒருவேளை… தனது மனைவிக்கு அனுப்புவதற்கு பதிலாக தனக்கு மாற்றி அனுப்பிவிட்டாரோ… என்று தன்னைத்தானே ஆறுதல்படுத்திக் கொண்டாள்.
அன்று மாலையில், தனது இ-மெயிலுக்கு புதிதாய் வந்த ஒரு கடிதத்தை திறந்து பார்த்தாள். காலையில் தனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிய அதே அதிகாரிதான் இந்த மெயில் கடிதமும் அனுப்பி இருந்தார். அதில், ஒரு இளம்பெண், ஒரு இளைஞனை கட்டிப்பிடித்த நிலையில் முத்தம் கொடுக்கும் படம் இணைக்கப்பட்டு இருந்தது.
`எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது… உனக்கு பிடித்து இருக்கிறதா?’ என்றும் இணைப்பு கடிதத்தில் கேட்டிருந்தார்.
அப்போதுதான் மனீஷாவுக்கு உண்மை புரிந்தது. தன்னை அவரது `ஆசைக்கு’ இணங்க வைக்கவே இப்படியெல்லாம் செய்கிறார் என்று புரிந்து கொண்டாள். அன்று வீட்டிற்குச் சென்ற அவளுக்கு தூக்கமே வரவில்லை. திருமணம் ஆகி இருந்தாலாவது அதுபற்றி கணவரிடம் கூறி, மேற்கொண்டு என்ன செய்யலாம்? என்று கேட்டிருக்கலாம். திருமணம் ஆகாதவள் என்பதால், பெற்றோரிடமும் அதுபற்றி சொல்ல முடியாமல் தவித்தாள்.
மறுநாள் அலுவலகம் சென்று சீட்டில் அமர்ந்த உடனேயே அதே அதிகாரியிடம் இருந்து இன்டர்காமில் அழைப்பு வந்தது. அவரைப் பார்க்கச் சென்றாள். அப்போது ரொம்பவே வழிந்தபடி பேசினார் அந்த அதிகாரி.
“எஸ்.எம்.எஸ்., மெயில் எல்லாம் பார்த்து இருப்பாய் என்று நினைக்கிறேன். இவற்றில் உனக்கு விருப்பம் இருந்தால், அடுத்த மாதமே ப்ரமோஷன் தருகிறேன். சம்பளமும் 30 சதவீதம் கூடுதலாகும்” என்றார்.
இதைக்கேட்டு கோபமான மனீஷா, “நான் வேலை பார்க்க வந்தது, உங்கள் மனைவியாக அல்ல…” என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.
அடுத்தநாளே மனீஷா மீது பல புகார்கள் கூறப்பட்டன. வேலையை சரிவர செய்வதில்லை. சக ஊழியர்களை மதிப்பதில்லை, அதிக சம்பளம் கேட்டு மிரட்டுகிறார்… என்றெல்லாம் கூறி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
வேறு வழி தெரியாத மனீஷா அந்த நிறுவனத்தின் வேலையை உதறிவிட்டு அடுத்த நிறுவனத்திற்கு அதைவிட நல்ல பதவிக்கு அதிகப்படியான சம்பளத்திற்கு சென்றுவிட்டாள்.
மனீஷா மட்டுமல்ல, நிறைய பெண்கள் பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேல் அதிகாரிக்கு பணிந்து போகாதபட்சத்தில் பதவி குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்துவிட்டாலும், இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளில் உள்ள சீனியர் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை 15 சதவீதமே என்கிறது ஒரு சர்வே.
`நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனவேதனை அளிக்கும் பாலுணர்வு சார்ந்த உடல் நெருக்கம், நெருங்க முயற்சிப்பது, பாலியல் சலுகைகள் காட்டுமாறு ஒரு பெண்ணை வற்புறுத்துவது அல்லது வேண்டுவது, பாலியல் தன்மை கொண்ட குறிப்புகளை உணர்த்துதல் அல்லது புகைப்படம் அனுப்புதல், பாலியல் தன்மை கொண்ட எந்த வகையான விரும்பத்தகாத உடல் சார்ந்த, வார்த்தைகள், வார்த்தை அல்லாத நடவடிக்கைகளாக இருப்பதே பாலியல் தொந்தரவு’ என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இப்படி எந்தவொரு நிலையிலும் ஒரு பெண்ணை, தனது ஆசைக்கு உட்பட வைப்பது அல்லது அதற்கு முயற்சிப்பது சட்டப்படி குற்றம். அதற்கு தக்க தண்டனை வழங்க சட்டத்திலும் இடம் இருக்கிறது.
நீங்களும் பணிபுரியும் பெண்ணா? உங்களுக்கும் பாலியல் தொந்தரவு உள்ளதா? அப்படியானால், உங்களுக்காக சில அறிவுரைகள் :
* பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை ஒரு பெண் எளிதில் பெற வேண்டும் என்றால், அவள் பாலியல் சலுகை காட்ட வேண்டும் என்ற எண்ணம் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சில ஆண்களிடம் உள்ளது. நீங்கள் அதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிவதை தவிர்க்கவும்.
* பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகம் உள்ளது. ஆனால், அது வெளிப்படையாக பதிவு செய்யப்படவில்லை என்கிறார்கள் பெண்கள் அமைப்பினர். அதனால், இந்த பாலியல் தொந்தரவு விஷயத்திலும் நீங்கள் விட்டுக்கொடுத்துப்போக முயற்சிக்காதீர்கள்.
* நீங்கள் ஆடை அணியும் விஷயத்திலும் கவனமாக இருங்கள். உங்கள் ஆடை சற்று கவர்ச்சியாக இருந்தாலும் கூட, அது உங்களது சக ஊழியர்களின் மனதை சலனப்படுத்தலாம்.
* உங்களை மேல் அதிகாரியோ அல்லது சக ஊழியரோ தவறான நோக்கத்தில் பார்த்தால், அவரை உடனே எச்சரியுங்கள். தொந்தரவுகள் தொடர்ந்தால் வேறு நிறுவனத்திற்கு வேலையை மாற்றிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் போலீசையும் அணுகலாம்.
* பாலியல் கொடுமைகள் குறித்த சட்ட அறிவை தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். உங்களுக்கு அந்த தொந்தரவு வந்தால், அவர்களை எச்சரிக்க இது வசதியாக இருக்கும்.
* பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தல் என்ன என்பது தொடர்பான பயிற்சி வகுப்புகள் சில நிறுவனங்களில் தரப்படுகின்றன. அப்படிப்பட்ட நிறுவனங்களில் நீங்கள் பணிபுரிந்தால், மேற்படி தொந்தரவுக்கு நீங்கள் உட்படும் வாய்ப்பு மிகக்குறைவு.
* முக்கியமாக, பாலியல் சலுகைகளை எதிர்பார்க்காத – உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தரும் நிறுவனத்தில் மட்டுமே பணியைத் தொடருங்கள்.

0 Response to "பதவி உயர்வுக்காக `பாலியல் சலுகை’"

Post a Comment