கண்களால் கணக்கு போடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒருவரை பார்த்தவுடன் இவன் இப்படிப் பட்டவன் தான் என்ற ஒரு தவறான கணக்கை போட்டு விடுவார்கள். சிலர் விசயத்தில் அவகள் தோற்றமும், முகக்கோடுகளும் அவர்கள் குணத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் அது போல பார்க்கும் அனைவரையுமே பார்வையாலயே எடை போட்டு விட முடியாது. ஆதிமுதல் பழகும் சில உற்ற நண்பர்களையே சில வேளைகளில் புரிந்துகொள்ள முடிவதில்லை இதில் ஒருவரை பார்த்ததும் எடை போடுவது எப்படி சரியாகும்.
மனம் என்பது நல்லதை நாடுவதைப் போல தீயதையும் நாடும் குணமுள்ளது, இன்று நல்லதை நாடுகின்ற உங்கள் நண்பனை காலாகாலத்துக்கும் நல்லவன் என்ற முத்திரையை குத்திவிட முடியாது, நாளை அவன் எதை நாடுவான், எதை தேடுவான் என்பது யாருக்குத் தெரியும். நீங்கள் பழகிக்கொண்டிருக்கும் நல்லவர்களை நீங்கள் நம்பிக்கை என்ற சங்கிலியால் கட்டிவைத்துள்ளீர்கள், நாளை அவர்கள் அதை அவிழ்க்க மாட்டார்கள் என்று எந்த நிச்சயமும் இல்லை.
எனவே யாரையும் பார்த்து 'இவர்கள் இப்படிதான் இருப்பார்கள்' என்ற முடிவிற்கு வந்து விடாதீர்கள். மனிதன் என்பவன் புரிந்துகொள்ள முடியாத ஒரு இனம். குரங்கு, யானை, பாம்பு, நண்டு, நரி என்று இவைகளை எல்லாம், நாம் ஆராய முடியும். அவைகளை எளிதில் எடைபோட முடியும். அவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட குண நலன்கள் இருக்கும். அந்த குணநலன்களை தாண்டி அவைகள் வேறு எதுவும் செய்து விடாது, ஆனால் மனிதன் அப்படியல்ல அவனின் மன ஜாலங்கள் எதையெல்லாம் செய்யத் தூண்டும் என்பது அவனுக்கே தெரியாது.
அப்படியென்றால் எந்த மனிதனிடமும் பழகக்கூடாதா? கெடுதல் செய்து விடுவார்களா? யாரையும் நம்பக் கூடாதா? ஏமாற்றி விடுவார்களா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பாதீர்கள். யார் மேலும் நம்பிக்கை வைத்து பழகலாம், உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர்களும் நடந்து கொள்ளலாம். ஆனால் யாரைப்பற்றியாவது உங்களுக்கு அதிருப்தி ஏற்படும்போது, குமுறிக் கொண்டிருக்காமல், குழம்பிக் கொண்டிருக்காமல் தெளிவடைய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கங்கள்.
பார்ப்பதற்கு பாலைப்போல இருப்பவர்கள் பழகுவதற்கு தேளைப்போல இருக்கலாம், பிறருக்கு பிடிக்காத, பிறரோடு பொருந்தாத ஒருவன் நமக்கு பிடித்தவனாக, நம் எண்ணங்களோடு பொருந்தியவனாக இருக்கலாம், இன்று நாம் வெறுக்கும் ஒருவன் நாளடைவில் நமக்கே விரும்பத் தக்கவனாகலாம். சிலர் சிலசமயங்களில் நம்மோடு ஒத்துப் போகிறவர்களாகவும், சிலசமயம் விரும்பத் தகாதவர்களாகவும் இருக்கலாம். சிலரை நாம் மிகவும் விரும்பலாம் ஆனால் அவர்கள் நம்மை திரும்பிப் பார்க்காமலே போகலாம்.
இப்படி மனித பிறவிகள் வெவ்வேறு குணநலன்களோடு, வெவ்வேறு விருப்பங்களோடு, வெவ்வேறு மன நிலைகளோடு, வெவ்வேறு ஆசைகளோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை புரிந்துகொள்வதை போல அவர்கள் இருப்பதில்லை, அவர்களை எப்படி எடை போடுகிறோமோ அப்படி அவர்கள் இருப்பதில்லை, அவர்களைப் பற்றிய நம் அபிப்ராயங்களின் படி அவர்கள் இருப்பதில்லை. நாம் நினைப்பது போல் அவர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
எனவே யாராவது உங்களை வெறுத்தாலோ, உங்களை பிரிந்தாலோ, உங்களை அவமதித்தாலோ, கண்டுகொள்ளாமல் போனாலோ நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதுவரையிலும் 'இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்' என்று நினைத்த நீங்கள் 'இவர்கள் இப்படியும் இருப்பார்கள்' என்ற புதிய பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற அனுபவங்கள் இனிமேலும் வரும்போது இந்த பாடம் உங்களுக்கு கை கொடுக்கும்.
0 Response to "கண்களால் கணக்கு போட்டுவிடாதீர்கள்!"
Post a Comment