சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.


தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான்.
ஒவ்வாமை நோய்கள்
ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண் கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.
அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் ‘கிரந்தி உடம்பு’ என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.
சுகாதாரமான சூழல் கோட்பாடு
அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?
கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.
முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.
அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.
இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?
இல்லை!
கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.
ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.
நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.
ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.
வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)
தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.
தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.
அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.
இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.
ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.
இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.
மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.
ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.
இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.
ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்

0 Response to "சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது."

Post a Comment