குள்ளநரி கூட்டம்


மதுரையில் நடக்கிற கதை. கத்தி, ரத்தம், சண்டை, ரவுடியிஸம், எலே… என்ற ஹைபிச் வசனங்கள் எதுவும் இல்லாமல் மதுரையின் மென்மையான இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீபாலாஜி.

சிம்பிளான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை என முற்றிலும் புதிதாகவே இருக்கிறது இந்தப் பயணம். படம் பார்க்கிற ரசிகனின் ரத்தத்தை சூடேற்றுவது அல்லது தாரை தாரையாக கண்ணீரை வரவழைப்பது என்ற எந்த உணர்ச்சி உசுப்பேற்றல்களும் இதில் இல்லை. தென்றலிடம் பூக்கள் தலை அசைத்து பேசுகிற மாதிரி ஒரு இதமான உணர்வு.
ஹீரோ விஷ்ணு நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர். தன் அப்பாவின் போன் நம்பருக்கு 1500க்கு ரீசார்ஜ் செய்கிறார், ஆனால் நம்பர் மாறி அந்தப் பணம் இன்னொரு நம்பருக்கு ரீசார்ஜ் ஆகிவிடுகிறது. அந்த போன் நம்பருக்கு சொந்தக்காரர் ஹீரோயின் ரம்யா நம்பேசன்.
இருவரின் மோதல் காதலில்முடிகிறது. இந்த விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவருகிறது. ஹீரோவின் அப்பாவுக்கு போலிஸ் என்றாலே பிடிக்காது. ஹீரோயின் அப்பா ஒரு போலிஸ்! அப்படிபோடு… காதல் கேள்விக் குறியாகிவிடுகிறது.
மாப்பிள்ளை போலிஸ் ஆனால் தான் கல்யாணம் என்று ஹீரோயின் அப்பா சொல்லிவிட, காதல் நூலில் சிக்கல் அதிகரிக்கிறது. காதலுக்காக ஹீரோ போலிஸ் வேலைக்கு முயற்சிப்பதும், அவர் சந்திக்கும் நண்பர்கள், காதல் கைக்கு வந்ததா, தொடரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ன? என்பது மீதிக் கதை.
எந்த ஜிகினா வேலைகளையும் நம்பாமல் கதையை மட்டுமே நம்பி பயணித்திருக்கும் இயக்குனரை பாராட்டாலாம். விஷ்ணு, கதைக்கு ரொம்ப பொருத்தம். படத்தில் தேவையான இடங்களில் மட்டும்
மூன்று பாடல்கள். கலர் கலர் ஆட்டங்கள் எதுவும் இல்லை என்பது ரொம்பவே ஆறுதல்.
கொடுக்க வேண்டிய பணத்தை ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நோட்டாக வாங்குவதும், பின் சில்லைறையாக்கி கடைசி ஒரு ரூபாயில் செண்டிமெண்ட் வைப்பதும் புதுசு. இது தமிழ் சினிமாவின் புது வகையான ரீசார்ஜ் காதல்.
ஹீரோயின் தோழி ஹீரோயினிடம், உங்களுக்கு மட்டும் எப்படிடீ காய்ச்சல் வர மாதிரி காதல் வருது… நாங்களும் அழகாத்தான் இருக்குறோம் எங்கள ஒரு பையன் காதலிக்க மாட்டேங்குறான் என்று பேசும் சில வசனங்கள் அங்கங்க நச்சுனு இருக்கு!
போலிஸ் செலக்‌ஷனில் காட்டப்படும் நண்பர்கள்… இவர்கள் போலிஸா என்ற கேள்வியை எழுப்பினாலும் ஏதேதோ நடந்த தமிழ் சினிமாவில் இது ஒன்னும் பெரிய தப்பில்லை என்றே தோன்றுகிறது. படத்தின் பல இடங்களின் சிரிக்க நல்ல வாய்ப்பு.
குள்ளநரி கூட்டம் – குறையில்லை

0 Response to "குள்ளநரி கூட்டம்"

Post a Comment