உற்சாகம் பிறக்க.......

நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய், உன் குரல் எவ்வளவு அழகாக இருக்கிறது, உன் சிரிப்பு, முக அமைப்பு என்று மொத்த உருவமே அழகு தோட்டமாக இருக்கிறது, உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்றுகிறது - கொஞ்சம் அழகாக இருப்பவருக்கு இது போன்ற வார்த்தைகள்தான் உற்சாகத்தை கொடுக்கும் ஆனால் அழகிற்கும் உற்சாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, பிறர் பாராட்டிதான் நமக்கு உற்சாகம் வர வேண்டுமா?
உனக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது, இனி நீ நினைத்ததெல்லாம் நல்லபடியாக நிறைவேறிவிடும், உன் கஷ்டங்களுக்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டது, ஊர் போற்ற வாழ போகிறாய் - இப்படி ஒரு ஜோதிட முடிவை கேட்பவனுக்கு உற்சாகம் பிறக்கும், இப்படிதான் நாம் உற்சாகத்தை உருவாக்க வேண்டுமா, சந்தோஷம் என்பது பிறரின் அபிப்பிராயத்திலா இருக்கிறது, சந்தோஷத்தை தருவது அழகோ, ஜோதிடமோ இல்லை, நம்மை எப்படி தயார்படுத்தி வைக்கிறோமோ அப்படிதான் அனைத்தும் நடக்கும்.
நீங்கள் மகிழ்ச்சியாகவோ, உற்சாகமாகவோ இருக்கத் தயாராகவில்லை என்றால் எப்படி உற்சாகம் கிடைக்கும். கதவை மூடி வைத்தால் வீட்டில் இருப்பவன் வெளியே வர முடியாது, வெளியே இருப்பவன் உள்ளே வர முடியாது, தயாராக இருக்க வேண்டும் என்பது தேவையான கதவுகளை திறந்து வைப்பதை போன்றது, உங்களில் தேங்கியிருக்கும் உற்சாகத்தை திறந்து விடுங்கள் அது அருவியை போல பாய்ந்து கொண்டிருக்கட்டும், வெளி மனிதர்கள் தருவது போதையை போன்ற சந்தோஷங்களாகும், அது துன்பத்திலேயும் கொண்டு விடும்
உற்சாகம் வர வேண்டும் என்று தயாராகி ஒரு கதவை நீங்கள் திறந்து வைத்தீர்களானால் சோர்வுகளையும், களைப்புகளையும் உள்ளே செல்ல அந்த கதவு அனுமதிக்காது, உலகாகட்டும் பிற மனிதர்களாகட்டும் அவைகள் தரும் உற்சாகத்தை மட்டுமே உள்ளே செல்ல அந்த கதவு அனுமதிக்கும், அதை செய், இதை செய் என்று பிறர் நம்மை தட்டுவதற்கு முன்னால் நாமே நம்மை தட்டி விட்டு செயல் புரிய ஆரம்பிக்க வேண்டும்.
நம்மீது அக்கரறையுள்ள நல்லவர்கள் நம்மை ஊக்குவித்தால் அதன் பலன் நிச்சயமுண்டு ஆனால் அழகாக இருக்கிறாய், நேரம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி நம்மை மகிழ்விப்பவர்களால் மயக்கமான மகிழ்ச்சியே கிடைக்கும், நீங்கள் தயாராகி விட்ட பின் முடிவு எப்படி இருந்தாலும் கவலைப்பட வேண்டாம், தோல்வியிலும் உற்சாகத்தை காணுங்கள், வெற்றியை கொண்டாடி பிறரோடு பகிர்ந்து கொள்வதை போல, தோல்வியை கொண்டாடி பகிர்ந்து கொண்டாலும் அது தவறாகாது.
செயல்களிலெல்லாம் உற்சாகம் இருக்க வேண்டும், செல்லும் பாதையிலிருந்து செய்யும் வேலைகள் வரையிலும் அனைத்தையும் உற்சாகமாக செய்வோம், களியாட்டங்களில் மட்டுமே உற்சாகத்தை கண்டால் நிமிடங்கள் செல்லும் போது அவை மறைந்து சோர்வை தந்துவிடும், தினசரி வேலைகளை செய்ய வேண்டிய பலமே உற்சாகத்திலிருந்தே பிறக்க வேண்டும், உற்சாகமில்லாமல் எதையும் நாம் செய்ய வேண்டாம்.
நமக்கு நாம்தான் ஜோசியக்காரன் எனவே நம்மிடமுள்ள நல்லவைகளை நினைத்து  உற்சாகபடுவோம், நமக்கு நாம் அழகானவர்கள் தான் எனவே நம்மை தாழ்வாக நினைக்காமல் உற்சாகம் கொள்வோம், எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்தே எதிர்பார்ப்போம், எது வேண்டுமோ அதற்கு தயாராவோம், வேண்டிய வாசல்களை திறந்தே வைப்போம் அவை எங்கிருந்தாலும் நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.

0 Response to "உற்சாகம் பிறக்க......."

Post a Comment