அழகுக்குறிப்புக்கள் பெண்களுக்கு
நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை பிரதானமாக்கிப் புனையப்படுகின்றன. முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடியென இருக்கும் முகத்தை எப்படி பராமரிப்பது என்று பார்ப்போம். முகம் என்றதும் பொதுவான ஒரு உறுப்பாக கருதாமல் கண், புருவம், மூக்கு, கன்னம், உதடு, தாடை, நெற்றி, காது என்று ஒவ்வொரு உறுப்பிற்கும் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும். இவையெல்லாம் சேர்ந்துதான் நம் முகத்தின் அழகு வெளிப்படுகிறது. இந்த வாரம் கண்ணைப் பற்றி பார்க்கலாம்.
கண்கள்


கண் புருவம், இமை இவைகள் அழகாக இருந்தால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும். கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் ஷேப் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும். புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும். கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள். அது சாயங்கால பார்ட்டி மேக்கப் மற்றும் விசேஷங்களுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். போட்டோக்களிலும் அழகாக தெரியும். ஆனால் மற்ற நேரங்களில் அது முகத்திற்கு ஒரு செயற்கையான தோற்றத்தை உருவாக்கும்.
கண் இமைகளை பொறுத்த வரை அதிக முடி மற்றும் மேல் நோக்கிய இமை முடிகள் அழகான தோற்றத்தை அளிக்கும். கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்திக் காட்டும் மஸ்காராக்களை உபயோகிக்கலாம். செயற்கை கண் இமைகளை ஒட்டும்போது அது தரமானதா, அதற்கு உபயோகப்படும் க்ளூ தரமானதா என்று பார்த்து வாங்குங்கள். இப்போதைய பேஷன் கண் இமைகளின் மேல் கறுப்பு ஐலைனர் கொண்டு வரைந்து முனைகளை பழங்கால ஸ்டைலில் சிறிது மேல் நோக்கி வளைத்து விடுவதுதான். ஐலைனர் போட்டு கீழேயும் மை போடுவது எல்லோருக்கும் எடுப்பாக இருக்காது. கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனரோடு கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது. ஐஷேடோ முக நிறத்திலேயோ, பிரவுன் நிறத்திலேயோ போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட். ஐ ஷேடோவில் மூஸ், க்ரீம், ஜெல், பவுடர் என்று பல ரேஞ்சுகளில் உள்ளது. மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன. அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை கன்சல்டண்டின் உதவியுடன் தேர்ந்தெடுங்கள். சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும். இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுதுமாக நீக்க வேண்டும். கண் மேக்கப்பை நீக்கவென்றே Eye Make up Remover என்று கடைகளில் கிடைக்கின்றது. பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம். தினமும் உறங்க செல்லும் முன் முகத்தை கழுவி விட்டு செல்வது கண்களுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. அவ்வாறு இரவில் முகம் கழுவிவிட்டு படுப்பதால் கண்ணில் வரும் கட்டிகள் போன்ற பிரச்சனைகள் அறவே அண்டாது. கண்களை அழுத்தித் தேய்ப்பது, தூசு விழுந்தால் கசக்குவது போன்றவற்றை தவிர்த்து கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. இப்படி சில அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தோமென்றால் நமது கண்கள் அழகாக, பளிச்சென்று இருக்கும்.
0 Response to "அழகுக்குறிப்புக்கள் பெண்களுக்கு"
Post a Comment